திருப்பூரை உடைக்க திட்டமிடுகிறாரா சக்கரபாணி? – பழநி மாவட்ட பிரிப்பு சர்ச்சைகள்! | Palani district division controversies was explained

“திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் வரப்போகிறது” என்று வட்டமடிக்கும் செய்திகளால் திருப்பூர் மாவட்ட அரசியல்வாதிகள் மட்டுமல்லாது மக்களும் கலக்கமடைந்து கிடக்கிறார்கள். ​முதல்வர் மு.க.ஸ்​டா​லினின் மனைவி துர்கா ஸ்டாலின் பழநி முருகனின் தீவிர பக்தர்.

அடிக்கடி ஆர்ப்​பாட்​ட​மில்​லாமல் பழநிக்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்வார். அப்போதெல்லாம் அவரது வருகை குறித்தான ஏற்பாடுகளை முன்னின்று செய்பவர் அமைச்சர் அர.சக்​கரபாணி தான். இதை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு துர்கா ஸ்டாலின் மூலமாகவே பழநி தனி மாவட்ட கோரிக்கையை வென்றெடுக்க சக்கரபாணி காய்நகர்த்​துவதாக உடன்பிறப்​புகள் காதைக்​கடிக்​கி​றார்கள்.

பொள்ளாச்சியை தலைநக​ராகக் கொண்டு மடத்துக்​குளம், உடுமலைப்​பேட்டை, வால்பாறை, பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தனி மாவட்டம் உருவாக்​கப்​படும் என அதிமுக தனது தேர்தல் அறிக்​கையில் சொன்னது. அதேபோல், பழநியை தலைமை​யிட​மாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்​கப்​படும் என திமுக-வும் தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. அதன்படி, பழநி, மடத்துக்​குளம், உடுமலைப்​பேட்டை, ஒட்டன்​சத்​திரம் தொகுதிகளை உள்ளடக்கி பழநியை தலைநக​ராகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க அமைச்சர் சக்கரபாணி மெனக்​கிடு​வ​தாகச் சொல்கி​றார்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய திருப்பூர் மாவட்ட திமுக சீனியர்கள் சிலர், “திண்​டுக்கல் மாவட்ட திமுக-வில் மூத்த அமைச்சரான ஐ.பெரிய​சாமி​யும், அவரது மகன் செந்தில்​கு​மாரும் அசைக்​க​முடியாக சக்தியாக இருக்​கி​றார்கள். ஐபி-யை மீறி அங்கு சக்கர​பாணியால் பெரிதாக எதையும் செய்து​விட​முடி​யாது. அதனால், பழநியை தலைமை​யிட​மாகக் கொண்டு தனி மாவட்​டத்தை உருவாக்​கினால் மாவட்ட அமைச்சராக தான் மட்டுமே அதிகாரத்​துடன் வலம்வரலாம் என நினைக்​கிறார் சக்கர​பாணி.

உள்ளுக்குள் இப்படியொரு திட்டம் இருப்பது கூட தவறில்லை. ஆனால், கொங்கு மண்டலத்தில் வரும் மடத்துக்​குளத்​தை​யும், உடுமலை​யையும் தென்மாவட்ட வாழ்வியல் சாயலைக் கொண்ட பழநி, ஒட்டன்​சத்​திரம் தொகுதி​களையும் உள்ளடக்கி புதிய மாவட்​டத்தை உருவாக்​குவது சிக்கலை உண்டாக்​கும்.

மக்களவைத் தேர்தலில் தனது விசுவாசியான ஈஸ்வர​சாமியை பொள்ளாச்சி தொகுதியில் நிற்க​வைத்து அவரை ஜெயிக்​கவும் வைத்தவர் சக்கர​பாணி. அதேபோல் 2026-ல், தற்போது அதிமுக வசம் உள்ள மடத்துக்​குளம், உடுமலை தொகுதிகளை திமுக-வுக்கு வசமாக்கிக் காட்டு​கிறேன் என்று தலைமையில் சொல்லித்தான் பழநி மாவட்டப் பிரிப்​புக்கு சக்கரபாணி அடிபோட்டதாக சொல்கி​றார்கள்.

பழநி மாவட்​டத்தில் திருப்பூர் மாவட்​டத்தின் இரண்டு தொகுதிகள் சேர்க்​கப்​படலாம் என்ற செய்தியை திருப்பூர் மாவட்ட திமுக செயலா​ளர்​களும் அமைச்சர் மு.பெ.​சாமி​நாதனும் அவ்வளவாய் ரசிக்​க​வில்லை என்கி​றார்கள். தங்களுக்கான ஆளுகை எல்லை குறைந்து போகும் என்பது இவர்களது கவலை.

அதேபோல், அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பிலும் இந்த பிரிவினையை விரும்​ப​வில்லை என்கி​றார்கள். ஆனால், மடத்துக்​குளம், உடுமலை தொகுதி​களில் உள்ள சக்கர​பாணியின் ஆதரவாளர்கள் எம்எல்ஏ, எம்பி, மாவட்டச் செயலாளர் கனவில் புதிய மாவட்​டத்தை வரவேற்றுக் கொண்டிருக்​கி​றார்கள்” என்றனர்.

இதுகுறித்து அமைச்சர் சக்கர​பாணி​யிடம் பேசினோம். “பழநியை தலைநக​ராகக் கொண்டு தனி மாவட்டம் அமைப்பது என்பது முதல்​வரின் முடிவு. அது அரசின் கொள்கை முடிவாக இருக்​கலாம். புதிய மாவட்டம் அறிவிப்பு இந்த சட்டப்​பேரவை கூட்டத் தொடரில் வெளியாகுமா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு என்னை பொறுப்​பாளராக முதல்வர் நியமித்​தார்.

அதனால் ஈஸ்வர​சாமியை வெற்றி பெற வைத்தோம். மாவட்ட பிரிவினை தொடர்பாக நான் எந்த முனைப்பும் காட்ட​வில்லை. பலரும் பல விதமான யூகங்​களைச் சொல்வார்கள். அதற்கெல்லாம் நான் பதில் சொன்னால் தவறாகி விடும்” என்றார். இதனிடையே, பொள்ளாச்சியை தலைநகராக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என முதல்​வ​ருக்கு கடிதம் அளித்​திருக்​கி​றார் பொள்​ளாச்சி தொகுதி எம்​எல்​ஏ-வான அதிமுக முன்​னாள் அமைச்சர்​ பொள்​ளாச்சி ஜெய​ராமன்​.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!