திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதும் யாதவ் என்பவர் மீது அவருடைய மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைபாடளித்துள்ளார்.

அதில், தானும், கணவரும் நெருக்கமாக இருந்ததை தனக்கு தெரியாமல் கணவர் தனது தொலைபேசியில் வீடியோ எடுத்து, ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகவும், பின்னர், தனது ஒன்றுவிட்ட சகோதரனுக்கும், இதர கிராமத்தினருக்கும் அவர் பகிர்ந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

அதன்பேரில், பிரதும் யாதவ் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவின்கீழ், பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றில் பிரதும் யாதவ் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவரது சட்டத்தரணி வாதிடுகையில், புகார் கொடுத்த பெண், பிரதும் யாதவ் சட்டப்படி திருமணம் செய்து கொண்டவர் என்றும், எனவே, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவுக்கு முகாந்திரம் இல்லை என்றும் கூறினார்.

அதை ஏற்காத கூடுதல் அரச தரப்பு சட்டத்தரணி, சட்டப்படியான கணவர் என்றபோதிலும், அந்தரங்கத்தை படம் பிடித்து வெளியிடவோ, மற்றவர்களுக்கு பகிரவோ அவருக்கு உரிமை இல்லை என்று வாதிட்டார்.
இந்த வழக்கில், நீதிபதி வினோத் திவாகர் தீர்ப்பு அளித்துள்ளார். பிரதும் யாதவ் மீதான குற்றவியல் வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி தனது தீர்ப்பில் ,

கணவர் மீது மனைவி வைத்த நம்பிக்கையை, குறிப்பாக நெருக்கமான சந்தர்ப்பத்தில் வைத்த நம்பிக்கையை கணவர் மதிக்க வேண்டும். நெருக்கமான வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்ததன் மூலம், அவர் திருமண பந்தத்தின் புனிதத்தன்மையை மீறிவிட்டார்.

நம்பிக்கையை மீறிய செயல், திருமண பந்தத்தின் அடித்தளத்தையே சிறுமைப்படுத்துகிறது. மனைவி என்பவள் கணவரின் நீட்சி அல்ல. தனிப்பட்ட உரிமைகள், விருப்பங்கள் கொண்ட ஒரு தனிநபர்.

திருமணம் என்பது மனைவியின் உரிமையாளர் என்ற அந்தஸ்தையோ, அவரை கட்டுப்படுத்தும் அதிகாரத்தையோ கணவருக்கு அளித்து விடாது. மனைவியின் உடல் சுதந்திரத்தையும், தனியுரிமையையும் மதிப்பது சட்டப்பூர்வ கடமை மட்டுமின்றி, தார்மீக கடமையும் ஆகும் என கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!