0
திருமலை: திருமலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விஜிலென்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி மாவட்டம், திருமலையில் அன்னமய்யா விருந்தினர் மாளிகை உள்ளது. இதன் அருகே நேற்று பிற்பகல் வனப்பகுதியில் இருந்து தடுப்பு வேலியை தாண்டி ஒரு சிறுத்தை வந்தது. திடீரென சிறுத்தை வந்ததால் அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சைரன் ஒலித்து சிறுத்தையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனையடுத்து விஜிலென்ஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் திருமலையை சுற்றியுள்ள வனப்பகுதி அருகே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். திருமலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ள தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.