தையிட்டியில் சட்டவிரோத கட்டடத்தை வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திறந்து வைத்தார்!

யாழ்ப்பாணத்தில் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையான திஸ்ஸ விகாரையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட மண்டபம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23.03.25) வடமாகாண பிரதி காவற்துறைமா அதிபர் தனபாலவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தி , சட்டவிரோதமான முறையில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில் , விகாரையை அகற்றி, தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு காணி உரிமையாளர்கள் கோரி வருவதுடன் , போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இருந்த போதிலும் , விகாரை நிர்வாகம் , இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் , மடாலயம் ஒன்றினை எவ்வித அனுமதியும் பெறாது சட்டவிரோதமான முறையில் அமைத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

சட்ட ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய காவற்துறையினர். அசமந்தமாக செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் , சட்டவிரோத கட்டடத்தை  வடமாகாண பிரதி காவற்துறை மா அதிபர் தனபால திறந்து வைத்துள்ளார்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபடும் மக்களை தொடர்ந்தும் காவற்துறையினர் அச்சுறுத்தி வருகின்றனர். தமது காணிகளை கேட்டு போராடும் மக்களுக்கு எதிராக பிணையில் வெளியில் வர முடியாத சட்டத்தின் கீழ் வழக்குகளை தொடரவும் முயற்சித்து வந்தனர்

இந்நிலையில் காவற்துறையினரின் நடவடிக்கைகளுக்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மனிதவுரிமை ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் தற்போதே மனித உரிமை ஆணைக்குழு தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான நிலையில் விகாரை நிர்வாகத்தின் சட்ட ரீதியற்ற செயற்பாடுகளுக்கு காவற்துறைனர் தொடர்ந்தும் துணை போவது குறித்து காணி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!