யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் குறித்த பகுதியில் இன்று மற்றுமொறு புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திஸ்ஸ விகாரைப் பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சினை நிவர்த்தி செய்யப்படும் என பௌத்தசாசன அமைச்சர் சுனில் செனவி அறிவித்திருந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள இப் புதிய கட்டிடம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு மேலதிகமாக, அப் பகுதியில் வேறுசில சட்டவிரோதக் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்த போது அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த பதில் மாவட்டச் செயாளர் மருதலிங்கம் பிரதீபன் தான் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதாகவும், அவ்வாறான சட்டவிரோதக் கட்டடங்கள் எவையும் அமைக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இராணுவத்தால் அமைக்கப்பட்டுவந்த அந்த சட்டவிரோத பௌத்த ஆக்கிரமிப்புக் கட்டங்களே இன்று மத வழிபாடுகளுக்குப் பின்னர் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அக் கட்டடங்கள் பிக்குகள் தங்குவதற்கான மடாலயமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தையே தடுத்து நிறுத்துவதற்குத் திராணியற்ற இந்த அரசாங்கம், எவ்வாறு திஸ்ஸ விகாரையை அப்புறப்படுத்தி, மக்களின் காணிகளை கையளிக்கும் என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.