நான்கு தடவைகள் இந்திய பிரதமர் இலங்கைக்கு வந்து விட்டார். இந்த நான்கு தடவைகளிலும் அவர் நான்கு இலங்கை ஜனாதிபதிகளை சந்தித்திருக்கிறார். பத்தாண்டு காலத்துக்குள் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பு நான்கு பேர்களிடம் கைமாறும் அளவுக்கு இச்சிறிய தீவின் அரசியல் ஸ்திரமற்றதாக இருந்து வருகிறது.ஆனாலும் பிரதமர் மோடியின் வருகையின்போது மாறாத இரண்டு விடயங்கள் உண்டு. ஒன்று இனப்பிரச்சினை தொடர்பான இந்திய நிலைப்பாடு. இரண்டாவது,மீனவர்களின் விவகாரம்.அதுவும் தமிழ் மக்களோடு தொடர்புடையதுதான்.
இந்தியப் பிரதமரின் வருகையை மூன்று தளங்களில் வைத்துப் பார்க்க வேண்டும்.முதலாவது பிராந்தியத் தளம். இரண்டாவது கொழும்பு. மூன்றாவது தமிழ் நோக்கு நிலை.
பிராந்தியத்தில் இந்தியா “அயலவர் முதலில்” என்று கூறிக்கொள்கிறது. ஆனால் நடைமுறையில் அதன் அயலில் உள்ள சிறிய நாடுகளை இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் இருந்து சீனா எங்கே கழட்டி எடுத்து விடுமோ என்ற நிச்சயமின்மைதான் காணப்படுகின்றது.நேபாளம், பங்களாதேஷ், மாலை தீவுகள் ஆகிய மூன்று நாடுகளிலும் இந்தியாவின் பிடி சகடயோகமாகத்தான் இருக்கிறது. இலங்கையிலும் அப்படித்தான். இப்பொழுது இலங்கையில் ஆட்சி செய்து கொண்டிருப்பது சீன இடதுமரபில் வந்த ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்திதான்.
இப்படிப்பட்டதோர் பிராந்தியப் பின்னணிக்குள் இந்தியப் பிரதமரின் வருகையின்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள்,காணொளிகளில் பிரதமர் மோடிக்கு அருகே அனுர பணிவான ஒரு இளைய சகோதரனைப்போலவே காணப்படுகிறார்.அயலில் உள்ள சிறிய நாடுகளுக்கும் தனக்குமான பிடி சகடயோகமாகக் காணப்படும் ஒரு பின்னணிக்குள் இலங்கைத்தீவில் தேசிய மக்கள் சக்தியை எப்படித்தன் செல்வாக்கு மண்டலத்துக்குள் பேணுவது என்பதுதான் இப்பொழுது இந்தியாவுக்குள்ள பிரதான சவால். இது முதலாவது.
இரண்டாவது,கொழும்பு.இப்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியின் குழந்தை.பொருளாதார நெருக்கடியைத் தீர்க்காவிட்டால் அதற்கு எதிர்காலம் இல்லை.சில தசாப்தங்களுக்கு முன்பு இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிராகக் காணப்பட்ட ஜேவிபிக்கு இப்பொழுது இந்தியா தொடர்பான அதன் கொள்கைகள் மாறியிருப்பதைக் காட்டவேண்டிய நிர்பந்தம் உண்டு.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு வந்தார்.அவர் இங்கு ஆட்சி மாற்றத்துக்கு தமிழ் மக்கள் நல்கிய ஆதரவை பாராட்டிப் பேசினார். அதாவது சீனா, புதிய அரசாங்கத்தை எதிர்பார்ப்போடு பார்க்கிறது என்று பொருள்.இந்த எதிர்பார்ப்பானது ஏற்கனவே தனக்குள்ள இந்தியாவின் எதிரி என்ற படிமத்தைப் புதுப்பிக்கக் கூடியது என்பது தேசிய மக்கள் சக்திக்கு தெரிகிறது.எனவே பேரரசுகளின் இழு விசைகளுக்குள் சிக்காமல் எப்படிப் பொருளாதாரத்தை நிமிர்த்துவது என்பதுதான் அவர்களுக்குள்ள சவால்.அதை நோக்கியே அவர்கள் இந்தியாவை அணுகுவார்கள்.
மேலும் இந்தியாவை அரவணைப்பதன்மூலம் இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவிடம் இருந்து வரக்கூடிய அழுத்தங்களையும் அவர்களால் குறைக்கலாம்.
மூன்றாவது தமிழ் நோக்கு நிலை.கடந்த 15 ஆண்டுகளிலும் இந்தியா தமிழர் தொடர்பான அதன் நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் காட்டியிருக்கவில்லை.13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் அல்லது யாப்பில் இருப்பதை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப் பாடாகக் காணப்படுகின்றது.ஆனால் இந்த கோரிக்கையை இந்தியா கொழும்பிடம்தான் முன்வைக்க வேண்டும். மட்டுமல்ல, இந்தியாவுக்கும் அதில் கூட்டுப்பொறுப்பு உண்டு.13ஆவது திருத்தம் என்பது இந்தியாவின் குழந்தை.எனவே கடந்த 15 ஆண்டுகளாக ஏன் அதனை முழுமையாக அமல்படுத்தவில்லை என்ற கேள்வியை இந்தியா கொழும்பிடமும் தன்னிடமும்தான் கேட்டுக்கொள்ள வேண்டும். இலங்கைத் தீவின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையின் கீழ் 13ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது.ஆனால் கடந்த 38 ஆண்டுகளாக அந்த நிறைவேற்று அதிகாரம் அந்த திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தாமல் தடுப்பதற்குத்தான் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது.அதாவது யாப்புக்கு எதிராகத்தான் நிறைவேற்று அதிகாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டதோர் அபகீர்த்தி மிக்க யாப்புப் பாரம்பரியத்தை கொண்ட ஒரு நாட்டிடம் திரும்பத் திரும்ப 13ஐ அமல்படுத்து என்று ஏன் இந்தியா கூறிக் கொண்டிருக்கிறது?
தமிழ் மக்களின் பக்கம் நிற்பதன் மூலம் கொழும்பைப் பகைத்துக் கொள்ள இந்தியா தயாரில்லை? 13ஆவது திருத்தம் என்பது இலங்கைத்தீவில் இந்தியாவின் இயலாமையைக் காட்டும் ஒரு குறியீடுதான்.
இந்த விடயத்தில் 13ஆவது திருத்தம் மற்றும் இந்திய இலங்கை உடன்படிக்கை தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு பொருத்தமானது.கடந்த வாரம் இந்தியப் பிரதரைச் சந்தித்தபின் கஜேந்திரகுமார் பின்வருமாறு கூறியிருக்கிறார்…”இலங்கைத் தீவில் இந்தியாவுக்கு மட்டும்தான் அதன் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஒரு பார்வை;பங்களிப்பு;உரித்து இருக்க முடியும் என்பதை நாங்கள் ஏற்று அங்கீகரிக்கின்றோம்…வேறு எந்த நாட்டுக்கும் தங்களுடைய தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் இலங்கையை அணுகும் உரிமையோ,அருகதையோ இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு என்பதை வெளிப்படுத்தினோம்….இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு என்ற அம்சத்தில் இலங்கைத் தீவு இந்தியாவுக்கு மற்றைய நாடுகளை விட முன்னுரிமை வழங்கிச் செயற்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டைக் குறிப்பிட்டோம்….விசேடமாக வடக்கு,கிழக்கில் அந்த உரிமை இந்தியாவுக்கு இருக்கின்றது என்பதை நாங்கள் அங்கீகரிக்கின்றோம் என்பதை இந்தச் சந்திப்பில் சொன்னோம்….”
இது முன்னணியின் புதிய நிலைப்பாடு அல்ல. இந்திய இலங்கை உடன்படிக்கை தொடர்பாக முன்னணி தொடர்ச்சியாக இதே கருத்தைத்தான் கூறி வருகிறது.இந்தியாவின் பிராந்திய நலன்களை பாதுகாக்கும் நோக்கிலான அந்த அணுகுமுறை மிகவும் தெளிவானது; பொருத்தமானது.
கடந்த 15 ஆண்டுகளாக இந்தியா தமிழ் மக்களின் பக்கம் நிற்பதன்மூலம் கொழும்பைப் பகைத்துக்கொள்ளத் தயாரில்லை என்ற செய்தியை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றது.ஆனால் இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் சீனா எப்பொழுதோ நுழைந்துவிட்டது.அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா 100ஆண்டு குத்தகைக்குப் பெற்றுவிட்டது.கொழும்பில் ஒரு துறைமுக நகரத்தை கட்டியெழுப்பி வருகிறது.
இப்படிப்பட்டதோர் உள்நாடு பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் சூழலின் பின்னணியில் வைத்தே இந்தியப் பிரதமரின் வருகையை விளங்கிக்கொள்ள வேண்டும்
இரு தசாப்தங்களுக்கு முன்பு வரை இந்தியாவின் எதிரியாக காணப்பட்ட ஒரு கட்சியானது இப்பொழுது இந்தியப் பிரதமருக்கு கௌரவப் பட்டம் வழங்கியிருக்கிறது.அரசியலில் நிரந்தரப் பகைவரும் இல்லை நிரந்தர நண்பர்களும் இல்லை.
ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்கு சிறீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்துக்கு சீனா ஆயுதங்களை வழங்கியது. ஆனால் அதே சீனாதான் ஜேவிபிக்கு கொம்யூனிச புத்தகங்களையும் வழங்கியது.ஜேவிபியின் முதலாவது போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் சிறை வைக்கப்பட்ட ஜேவிபிக்காரர்களிடம் ஒரு சிறை அதிகாரி என்னென்ன புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.அவர்கள் ஒரு பட்டியலைக் கொடுத்திருக்கிறார்கள்.அநேகமானவை சீன கொம்யூனிச புத்தகங்கள். அந்தப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து அவர்களுக்கு கொடுத்த அந்த அதிகாரி சிரித்துக்கொண்டே தன் கையில் வைத்திருந்த ரி-56 ரக ரைஃபிளைக் காட்டிச் சொன்னாராம்,”சீனா உங்களுக்கு இந்தப் புத்தகங்களைத் தந்தது, எங்களுக்கு இந்த துவக்கைத் தந்தது” என்று இதுதான் அரசியல்.
அன்றைக்கு சீனா மட்டுமல்ல இந்தியாவும் சிறீமாவோவின் அரசாங்கத்துக்கு ஆதரவாக நின்றது. இது நடந்தது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு. அதன்பின் இந்திய-இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தாகிய பின் ஜேவிபி அதன் இரண்டாவது போராட்டத்தைத் தொடங்கியது.அது முழுக்க முழுக்க இந்திய படையினரின் பிரசன்னத்துக்கு எதிரானது.அந்த இரண்டாவது போராட்டத்தோடு ஜேவிபியின் ஆயுதப்போராட்ட முனைப்பு முற்றாக நசுக்கப்பட்டது.
இவ்வாறு சீன இந்திய உதவிகளோடு நசுக்கப்பட்ட ஒரமைப்பு. இப்பொழுது இந்தியப் பிரதமருக்கு கௌரவப் பட்டத்தை வழங்குகிறது. இதுதான் அரசியல். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தரப் பகைவர்களும் இல்லை.
சிங்கள மக்கள் ஓர் அரசுடைய தரப்பு.பெரிய இனம். ஆனால் ராஜதந்திரம் என்று வரும் பொழுது விவேகமாக முடிவுகளை எடுக்கின்றார்கள்.அரசற்ற சிறிய இனமாகிய தமிழ் மக்களும் விவேகமான முடிவுகளை எடுக்கவேண்டும்.
விவேகமான முடிவென்பது 13ஐ ஏற்றுக்கொள்வதோ அல்லது “எக்கிய ராஜ்ஜிய”வை ஏற்றுக்கொள்வதோ அல்லது நீதிக்கான தமிழ்மக்களின் போராட்டத்தைக் கைவிடுவதோ அல்ல. உடனடியாகவும் முதலாவதாகவும் ஒரு முடிவை எடுக்க வேண்டும்..கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் கொடுத்த வெற்றி நிரந்தரமானது அல்ல என்பதனை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் நிரூபிக்க வேண்டும்.
மோடியின் வருகையையொட்டி தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர் ஆங்கிலத்தில் முகநூலில் பின்வருமாறு எழுதியிருந்தார்….”தென்னாசியாவின் சக்தி மிக்க தலைவர்கள். ஒருவர் தனது சிறுபிராயத்தில் புகையிரதத்தில் தேநீர் விற்றவர்.மற்றவர் புகையிரதத்தில் சிற்றுண்டிகள் விற்றவர். இருவருமே ஒரு காலம் அரசியல் இயக்கங்களின் உறுப்பினர்களாக இருந்தவர்கள்.ஒன்று ஆர்.எஸ்.எஸ்.அதிலிருந்து பிஜேபி எழுச்சி பெற்றது.மற்றது,ஜேவிபி. அதிலிருந்து என்பிபி எழுச்சி பெற்றது. இரண்டு கட்சிகளுக்கும் கொள்கைகள் வேறு வேறாக இருந்தாலும், இரண்டு கட்சிகளுமே ஊழலுக்கும் சுதந்திரத்திற்கு பின் தத்தமது நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய உயர் குழாத்துக்கும் எதிரானவை.இந்த இரண்டு ஐதீகப்பண்புமிக்க தலைவர்களும் தென்னாசியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடும்.”
இப்படிப்பட்ட பிராந்தியக் கனவு ஏதாவது தேசிய மக்கள் சக்தியிடம் இருக்குமாக இருந்தால் முதலில் அவர்கள் உள்நாட்டில் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். ஏனென்றால் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால் முழு இலங்கைக்கும் பாதுகாப்பு இல்லை மட்டுமல்ல இந்தப் பிராந்தியத்துக்கும் பாதுகாப்பு இல்லை என்பதுதான் கடந்த 15 ஆண்டுகால அனுபவமாக உள்ளது.