புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யுபிஐ சேவை சில மணி நேரம் பாதிக்கப்பட்டதால் பயனர்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர். கூகுள் பே, போன் பே உள்ளிட்ட முக்கிய யுபிஐ செயலிகள் முடங்கின.
இது தொடர்பாக ஏராளமான பயனர்கள் எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் யுபிஐ செயலி வேலை செய்யவில்லை என்றும், இதனால் கடைகளில் பணம் செலுத்தமுடியவில்லை என்றும் புகார் தெரிவித்து வந்தனர்.
மாலை 7 மணிக்கு ஆரம்பித்த இந்த பிரச்சினை சுமார் ஒரு மண் நேரத்துக்கும் மேலாக நீடித்ததாக தெரிகிறது. “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த பிரச்சினை தற்போது செய்யப்பட்டுவிட்டது. தடங்கலுக்கு வருந்துகிறோம்” என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
யுபிஐ சேவை பாதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே நெட்டிசன்கள் இது தொடர்பாக மீம்களையும் பறக்க விட தொடங்கி விட்டனர். பலரும் பாக்கெட்டில் பணம் வைத்திருப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகின்றனர். டவுன் டிடெக்டர் தரவுகளின்படி, கூகுள் பே பயனர்கள் பணம் செலுத்துவதில் 72% புகார்களை தெரிவித்துள்ளனர். பேடிஎம் பயனர்களும் பணம் செலுத்துதல் தொடர்பாக 86% புகார்கள் அளித்துள்ளனர்.