நியூயார்க்: ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை இந்தியாவில் தயாரிக்கக் கூடாது. அவர்கள் அமெரிக்காவில் தயாரிக்க வேண்டும் என வலியுறுத்திவரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “இந்தியாவுக்குச் செல்வது பரவாயில்லை, ஆனால் வரிகள் இல்லாமல் நீங்கள் இங்கு விற்க முடியாது, அதுதான் வழி.” என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அணுசக்தியை அதிகரிக்க ஓவல் அலுவலகத்தில் பல நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டபோது பேசிய ட்ரம்ப், “டிம் குக் இதைச் செய்ய மாட்டார் என்று எனக்கு ஒரு புரிதல் இருந்தது. அவர் ஆலைகளை உருவாக்க இந்தியாவுக்குச் செல்வதாகக் கூறினார். நான் சொன்னேன், இந்தியாவுக்குச் செல்வது பரவாயில்லை, ஆனால் வரிகள் இல்லாமல் நீங்கள் இங்கு விற்க முடியாது, அதுதான் வழி. நாங்கள் ஐபோன் பற்றிப் பேசுகிறோம். அவர்கள் அதை அமெரிக்காவில் விற்கப் போகிறார்கள் என்றால், அதை அமெரிக்காவில் தயாரிக்க விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.
முன்னதாக இது குறித்து ட்ரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், “அமெரிக்காவில் விற்கப்படும் அவர்களின் ஐபோன்கள் இந்தியா அல்லது வேறு எங்கும் அல்ல, அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் நான் நீண்ட காலத்திற்கு முன்பே தெரிவித்தேன். அப்படி இல்லையென்றால், ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவிற்கு குறைந்தபட்சம் 25% வரியை செலுத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல் கடந்த வாரம், ட்ரம்ப் தோஹாவில் பேசுகையில், “நான் அவரிடம், ‘டிம், நீங்கள் என் நண்பர். நான் உங்களை மிகவும் நன்றாக நடத்தினேன். நீங்கள் 500 பில்லியன் டாலர்களுடன் இங்கு வருகிறீர்கள், ஆனால் இப்போது நீங்கள் இந்தியா முழுவதும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதாகக் கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள நான் விரும்பவில்லை. இந்தியா உலகின் மிக உயர்ந்த, அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இருப்பதால், நீங்கள் இந்தியாவை கவனித்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் இந்தியாவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம். இந்தியாவிற்கு விற்பனை செய்வது மிகவும் கடினம். மேலும் அவர்கள் [இந்தியா] எங்களுக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளனர், அதன் அடிப்படையில், அவர்கள் எங்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கத் தயாராக இல்லை” என்று அவர் கூறியிருந்தார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய டிம் குக், “நடப்பு ஜூன் காலாண்டில், அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டிருக்கும். அமெரிக்காவில் விற்கப்படும் கிட்டத்தட்ட அனைத்து ஐபேட், மேக், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்போட்ஸ் தயாரிப்புகளுக்கும் வியட்நாம் தாயகமாக இருக்கும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது