பகவத் கீதை முதல் ‘ஃபேவரிட்’ சமோசா வரை – சுனிதா வில்லியம்ஸ் சுவாரஸ்யங்கள் | Sunitha Williams Interesting Facts was explained

மன வலிமை தந்த பகவத் கீதை: மூன்றாவது முறையாக சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாராதவிதமாக 9 மாதங்கள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் அவர் விண்வெளி மையத்தில் வீணாக பொழுதை கழிக்கவில்லை. விண்வெளி மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை கவனித்தார். இவரது 3 முறை பயணத்தில் இவர் 9 முறை விண்வெளி நடைபயணம் மேற்கொண்டார்.

மொத்தம் 62 மணி நேரம் 6 நிமிடங்கள் இவர் விண்வெளி நடைபயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய பெண், நீண்ட நேரம் விண்வெளி நடைபயணம் மேற்கொண்ட பெண் என்ற சாதனைகளை இவர் படைத்துள்ளார். பகவத்கீதையை படித்ததால்தான் எனக்கு மனவலிமை கிடைத்தது என்றார் சுனிதா.

சுனிதா வில்லியம்ஸ் தலைமுடியை ஏன் கட்டவில்லை? – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் நாசா விண்வெளி வீராங்னை சுனிதா வில்லியம்ஸ் பற்றி குறிப்பிடும்போது ” காட்டு முடி கொண்ட பெண்” என்று அவரை அழைத்தார். இது, நெட்டிசன்களிடையே பலத்த விவாதத்தை கிளப்பியது. அவர் ஏன் விண்வெளியில் முடியை கட்டாமல் பறக்கவிட்டார் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பினர்.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், “விண்வெளி வீரர்கள் விண்வெளியில் மைக்ரோ கிராவிட்டியை அனுபவிக்கிறார்கள். அதாவது அங்கு எந்தவித ஈர்ப்பு விசையும் இல்லாததால் முடி உட்பட எந்தப் பொருளும் கீழ்நோக்கி இழுக்கப்பட வாய்ப்பில்லை. அதனால்தான், சுனிதா வில்லியம்ஸின் தலைமுடி அனைத்து திசைகளிலும் சுதந்திரமாக பறக்க காரணம்.

இது, அவர்களின் உச்சந்ததலையை குளிர்ச்சியாகவும், வசதியாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும், சுற்றுப்புறங்களை மிகவும் திறமையாக கண்காணிக்கவும், இறுக்கமான சிகை அலங்காரங்களால் ஏற்படும் அசவுகரியங்களை தடுக்கவும் சுனிதா வில்லியம்ஸ் தனது தலைமுடியை கட்டவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

சுனிதாவும்… சமோசாவும்… சுனிதா வில்லியம்ஸின் தந்தை தீபக் பாண்டியா. இவர் குஜராத்தின் மெக்சானா மாவட்டம் ஜூலாசன் பகுதியைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் குடியேறியதும், அங்கு வசித்த ஸ்லோவேனியா நாட்டை சேர்ந்த உர்சுலின் போனியை திருமணம் செய்தார். இவர்களது 3 வது மகள்தான் சுனிதா வில்லியம்ஸ். இவருக்கு சமோசா மிகவும் பிடிக்கும்.

விண்வெளி மையத்துக்கு செல்லும் போதெல்லாம் தனக்கு பிடித்த சமோசாவையும் இவர் எடுத்துச் செல்வது வழக்கம். இந்த இந்தியத் தொடர்பு தான் சுனிதாவை இந்தியர்கள் கொண்டாடக் காரணமாகியுள்ளது. சுனிதா பூமி திரும்புவதை முன்னிட்டு குஜராத்தின் ஜூலாசன் பகுதியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அவர் பூமி திரும்பியதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

ஏன் சந்திக்கவில்லை? அதிபர் ட்ரம்ப் விளக்கம்: விண்வெளியில் 9 மாத காத்திருப்புக்குப் பிறகு பூமிக்கு திரும்பிய சுனிதா, புட்ச் வில்மோர் எப்போது வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், “நீண்ட காலம் விண்வெளியில் தங்கியிருந்ததால் அவர்களது உடல்நிலை மோசமாக இருக்கும்.

அங்கு ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் ஆயிரம் பவுண்ட் எடையைக்கூட தூக்க முடியும். சுனிதா, புட்ச் உட்பட 4 பேரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அவர்களது உடல்நிலை தேறியதும் நிச்சயம் வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்துக்கு சுனிதா வில்லியம், வில்மோர் அழைக்கப்படுவார்கள்” என்றார்.

ஜோ பைடனால் தாமதம் எலான் மஸ்க் புகார்: விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமி திரும்பியது பற்றி எக்ஸ் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், ‘‘டிராகன்- 9 குழுவினரை பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப அழைத்து வந்ததற்கு ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா குழுவினருக்கு எனது வாழ்த்துகள். இந்தத் திட்டத்துக்கு முன்னுரிமை அளித்த அதிபர் ட்ரம்புக்கு எனது நன்றி’’ என தெரிவித்துள்ளார்.

மேலும் டி.வி. சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை நாங்கள் முன்பே பூமிக்கு திரும்ப அழைத்து வந்திருக்க முடியும். இந்த கோரிக்கையை முன்னாள் அதிபர் ஜோ பைடனிடம் தெரிவித்தோம். ஆனால், இதை அவர் நிராகரித்தார். இதனால் விண்வெளி மையத்தில் 8 நாட்கள் மட்டுமே தங்கி இருந்திருக்க வேண்டியவர்கள் பூமி திரும்ப 9 மாதங்கள் ஆனது. அவர்களை இவ்வளவு நாள் அங்கே விட்டு வைத்தது மிகவும் கொடுமையானது’’ என்றார்.

அதிபர் ட்ரம்பும் சமீபத்தில் இதே குற்றச்சாட்டை கூறியிருந்தார். ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட பதிவில், “பைடன் நிர்வாகத்தினால் விண்வெளியில் கைவிடப்பட்ட துணிச்சலான இரண்டு விண்வெளி வீரர்களை பூமிக்கு திரும்ப அழைத்து வரும்படி, எலான் மஸ்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளேன்’’ என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசிக்க:

நன்றி

Leave a Reply

error: Content is protected !!