ரஷ்யா தனது இராணுவத்தின் அளவை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 18-30 வயதுடைய 160,000 ஆண்களுக்கு படையில் இணைந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
இது 2011க்குப் பின்னரான ரஷ்யாவின் அதிகபட்ச எண்ணிக்கையிலான கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு ஆகும்.
ரஷ்யா வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் கட்டாய இராணுவ சேவைக்கு அழைப்பு விடுக்கிறது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, அதிகபட்ச வயதை 27 இலிருந்து 30 ஆக உயர்த்துவதன் மூலம், கட்டாய இராணுவ சேவைக்கு கிடைக்கக்கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இளைஞர்கள் தபால் மூலம் வழங்கப்படும் அழைப்பு அறிவிப்புகளுடன், அரசு சேவை வலைத்தளமான Gosuslugi இல் அறிவிப்புகளைப் பெறுவார்கள்.
மொஸ்கோவில், mos.ru நகர வலைத்தளம் வழியாக ஏப்ரல் 1 ஆம் திகதி ஏற்கனவே அழைப்புகள் அனுப்பப்பட்டதாக செய்திகள் வந்தன.
ரஷ்யா தனது இராணுவத்தின் ஒட்டுமொத்த அளவை கிட்டத்தட்ட 2.39 மில்லியனாகவும், செயலில் உள்ள படைவீரர்களின் எண்ணிக்கையை 1.5 மில்லியனாகவும் அதிகரிக்க வேண்டும் என்று புட்டின் கூறிய பல மாதங்களுக்குப் பின்னர், ஒரு வருட இராணுவ சேவைக்கான வசந்த கால அழைப்பு வந்தது.
இது வரும் மூன்று ஆண்டுகளில் 180,000 அதிகரிப்பாகும்.
இந்த அழைப்புக்கு மத்தியில், உக்ரேனில் போரிட புதிய கட்டாயப் படைவீரர்கள் அனுப்பப்பட மாட்டார்கள் என்று ரஷ்யாவின் துணை அட்மிரல் விளாடிமிர் சிம்லியான்ஸ்கி கூறினார்.
இருப்பினும், ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளில் நடக்கும் மோதலில் கட்டாய இராணுவச் சேவையாளர்கள் கொல்லப்பட்டதாகவும், முழு அளவிலான போரின் ஆரம்ப மாதங்களில் அவர்கள் உக்ரேனில் சண்டையிட அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.
2022 பெப்ரவரியில் உக்ரேனைக் கைப்பற்ற படைகளுக்கு உத்தரவிட்டதிலிருந்து புட்டின் இராணுவத்தின் அளவை மூன்று முறை அதிகரித்துள்ளார்.
உக்ரேன் – ரஷ்யாவுக்கு இடையிலான போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்த போதிலும் மோதல்கள் மும்முரமாக அரங்கேறி வருகின்றன.
செவ்வாய்க்கிழமை (01) தெற்கு நகரமான கெர்சனில் உள்ள ஒரு மின் நிலையத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் 45,000 மக்களை மின்சாரம் இல்லாமல் தவிக்கச் செய்ததாக உக்ரேன் கூறியது.
உக்ரைனுடனான அமெரிக்காவின் மத்தியஸ்த போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்த போதிலும், உக்ரேனின் எரிசக்தி வசதிகளைத் தாக்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறுகிறது.
அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மொஸ்கோ மீறியதை மறுக்க வெளிப்படையாக முயற்சிக்கும் வகையில், உக்ரேனிய ட்ரோன்கள் இடைநிறுத்தப்படுவதற்கான சிறிய அறிகுறியுடன் தாக்குதல்களை நடத்தியதாக புட்டினிடம் கூறியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.