பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாடப் போவதில்லை என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை (BCCI ) அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இத் தாக்குதலுக்கு விளையாட்டுப் பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதன் எதிரொலியாக இனி வரும் காலங்களில் பாகிஸ்தானுடன் இரு தரப்பு தொடர்களில் விளையாடப் போவதில்லை என பி.சி.சி.ஐ. உறுதி அளித்துள்ளது.
இது குறித்து பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா கருத்துத் தெரிவிக்கையில் ‘இனி வரும் நாட்களிலும் இருதரப்பு போட்டிகளில் பாகிஸ்தானுடன் கண்டிப்பாக விளையாட மாட்டோம். பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். எங்கள் அரசாங்கம் என்ன சொன்னாலும், நாங்கள் செய்வோம். அரசாங்கத்தின் நிலைப்பாடு காரணமாக இருதரப்பு போட்டிகளில் பாகிஸ்தானுடன் விளையாடுவதில்லை. இனி வரும் காலங்களிலும் இருதரப்பு போட்டிகளில் பாகிஸ்தானுடன் விளையாட மாட்டோம். ஆனால் ஐ.சி.சி. போட்டிகளை பொறுத்தவரை, ICC வற்புறுத்தலின் காரணமாக நாங்கள் விளையாடுகிறோம்‘ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் ICC தொடர்களில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என ஐ.சி.சி.-க்கு பி.சி.சி.ஐ. கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு தரப்பு தொடர்களில் விளையாடவில்லை. ஐ.சி.சி. தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.