வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பிட்காயின் முதலீட்டாளரை ஏமாற்றி அவர் கணக்கில் இருந்த 4,100 பிட்காயின்களை சிங்கப்பூரை சேர்ந்த மெலோனி லாம் (20) மற்றும் அவரது நண்பரான ஜீன்டீல் செரானோ ஆகியோரது சொந்த கணக்கிற்கு மாற்றியுள்ளனர். அதன் இன்றைய மதிப்பு 450 மில்லியன் டாலராகும். இந்த பணத்தில் அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
மெலோனி லாம், கைது செய்யப்படுவதற்கு அதாவது 2024-ம் ஆண்டு செப்டம்பருக்கு முன்பாக மியாமி, லாஸ்ஏஞ்சல்ஸ் இரவு கேளிக்கை விடுதிகளில் ஒரு நாளைக்கு 5 லட்சம் டாலர் வரையில் செலவு செய்துள்ளார். குறிப்பாக, 48 ஷாம்பெய்ன் பாட்டில்களுக்கான 72,000 டாலரும், கிரே கூஸ் வோட்கா 55 பாட்டில் வாங்குவதற்கு 38,500 டாலரும் செலவிட்டுள்ளார். மாடல் அழகிகளுக்கு 20,000 (ரூ.18 லட்சம்) டாலர் மதிப்புடைய ஹெர்ம்ஸ் பர்கின் பைகளை வாங்கி பரிசளித்துள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 கோடியாகும்.
லம்போர்கினி, போர்ஷ், பெராரி உள்ளிட்ட 30 சொகுசு கார்களை வாங்கி குவித்துள்ளார். இதில், பகானி ஹுய்ரா காரின் மதிப்பு மட்டும் 38 மில்லியன் டாலர் (ரூ.33 கோடி). லாம் மற்றும் செரானோ ஆகியோரின் சொகுசு வாழ்க்கையை கண்காணித்து வந்த அமெரிக்க புலானாய்வு அதிகாரிகள் அவர்களை கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். வாஷிங்டன் நீதிமன்றத்தில் லாம் மீது 230 மில்லியன் டாலர் மதிப்பிலான பிட்காயினை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.