பிள்ளையான் + இனியபாரதி + சகாக்களின் கைதுகளும், வெளிவரும் உண்மைகளும்!

கொலை உட்பட பல குற்றங்களில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், குற்றப் புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமாரின் வாகனச் சாரதியாகச் செயற்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (7ஆம் திகதி) கல்முனை காவற்துறைப் பிரிவில்  கைது செய்யப்பட்ட சந்தேகநபர், திருக்கோவில் காவல்  நிலையத்தில்  முன்னிலைப்படுத்தப்பட்டதாக காவற்துறைனர் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையான் குழுவின் குற்றங்கள் தொடர்பான தொடர்ச்சியான விசாரணைகளின் நீட்டிப்பாக இந்தக் கைது செய்யப்பட்டுள்ளது. 34 வயதுடைய கணகர் வீதி, தம்பிலுவில் 01 ஐச்சேர்ந்த செழியன் என அழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ் என்பவரே இவ்வாறு கைதானவராவார்.

கைதானவர் கடந்த 2007, 2008, 2009 காலப்பகுதியில் இனிய பாரதியின் சாரதியாகச்செயற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதக் குழுவால் கொலை, கடத்தல், காணாமல் போதல், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை இயக்குதல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றங்களில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவருக்கு 2007ஆம் ஆண்டு 17 வயது எனவும், அவர் எப்போது, ​​எந்த குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

அவரது கைது நடவடிக்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கான தற்காலிக ஏற்பாடுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே.புஷ்பகுமார் எனும் இனியபாரதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (6.07.25) அதிகாலை கைது செய்யப்பட்டார்.

அத்துடன், அவரது சகாவான சிவலிங்கம் தவசீலன் மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் வைத்து கைதானார். இவர்கள் இருவரும் 1979ம் ஆண்டின் 48ம் இலக்க பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post பிள்ளையான் + இனியபாரதி + சகாக்களின் கைதுகளும், வெளிவரும் உண்மைகளும்! appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!