புதிய வேலை வாய்ப்புகள் முதல் ஆய்வுக் கட்டணம் தள்ளுபடி வரை – தமிழக தொழில் துறையின் முக்கிய அறிவிப்புகள் | From Taiwanese park to inspection fee waiver – industry department announcements

சென்னை: சென்னைக்கு அருகில் ரூ.10,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன் 20,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் சர்வதேச தரத்தில் ஒரு பிரத்யேக தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார். பேரவையில் இன்று (ஏப்.25) தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு பதிலளித்து, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகளின் விவரங்கள் இதோ…

> தமிழ்நாட்டில் ஈர்க்கப்படும் அந்நிய நேரடி முதலீட்டில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட தைவான் நாட்டு நிறுவனங்களுக்கு, உதிரி பாகங்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்கென சென்னைக்கு அருகில் ரூ.10,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் சர்வதேச தரத்தில் ஒரு பிரத்யேக தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும்.

> அமெரிக்கா, ஜெர்மனி, தென் கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலுள்ள முதலீட்டாளர்களுக்கு நேரடி வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு சேவைகள் வழங்குவதற்கு, இந்நாடுகளில் வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வுகள் (Guidance Desks) அமைக்கப்படும்.

> தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கும் விதமாக மினி டைடல் பூங்கா அமைக்கப்படும்.

> தமிழ்நாட்டின் தொழில் துறையின் சர்வதேச தரத்திலான உற்பத்தி திறனையும், வரலாற்று சிறப்புகளையும், வளர்ச்சி மற்றும் சாதனைகளையும் காட்சிப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களின் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்.

> கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.650 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 9,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சின்னசேலம் வட்டத்தில், சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

> தென்காசி மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 3000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சங்கரன்கோவில் வட்டத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

> சிவகங்கை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், ரூ.200 கோடி முதலீட்டினை ஈர்ப்பதுடன், 2000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், காரைக்குடி வட்டத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

> வேலூர் மாவட்டத்தில், ரூ.500 கோடி முதலீட்டினை ஈர்ப்பதுடன், 5000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், காட்பாடி வட்டத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

> திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.250 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 2500 புதிய வேலைவாய்ப்புகளை குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக நாட்றம்பள்ளி வட்டத்தில் சுமார் 125 ஏக்கர் பரப்பளவில் தோல் அல்லாத காலணி உற்பத்திப் பூங்கா உருவாக்கப்படும்.

> திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை ஜவுளி மற்றும் ஆடை தயாரிக்கும் தொழில் மையங்களாக உருவாக்கும் விதமாக ஜவுளி தொழில் கூட்டமைப்புகளுடன் இணைந்து இம்மாவட்டங்களில் சிப்காட் டெக்ஸ் பார்க்ஸ் (SIPCOT Tex Parks) எனும் ஆயத்த தொழிற்கூட வசதிகள் (Plug & Play facilities) ஏற்படுத்தப்படும்.

> திருவள்ளூர் மாவட்டம் – கும்மிடிப்பூண்டி, மாநல்லுார் மற்றும் தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காக்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 22.70 மில்லியன் லிட்டர் மூன்றாம் நிலை மறுசுழற்சி நீர் (TTRO water) விநியோகிப்பதற்கான அமைப்பு ரூ.380 கோடியில் ஏற்படுத்தப்படும்.

> தொழிலாளர்களின் நலனை பேணும் விதமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிள்ளைப்பாக்கம், ஒரகடம் மற்றும் வல்லம் வடகால் தொழிற்பூங்காக்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் தங்குமிட தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் 2,000 படுக்கைகள் கொண்ட தொழிலாளர் தங்குமிட வசதிகள் உருவாக்கப்படும்.

> தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மூலம் கடன் பெறும் சுமார் 1300 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில், காலக்கடன்களுக்கு பெறப்பட்டு வரும் ரூ.5000 முதல் ரூ.10 லட்சம் வரையிலான ஆய்வுக்கட்டணம் இந்நிதியாண்டில் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.

> தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நவீன சேமிப்பு வசதிகளின் அவசியத்தைக் கருதி, புதிய சேமிப்பு கிடங்குகள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் “தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கொள்கை” (Tamil Nadu Warehousing Policy) வெளியிடப்படும்.

> கடல்சார் உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் துறையில் முதலீடுகளை ஊக்குவித்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக “கடல்சார் உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் கொள்கை 2025” வெளியிடப்படும்.

> தஞ்சை மாவட்டத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ராஜாமடத்தில் சுமார் 100 ஏக்கரில் கடல்சார் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி பூங்கா அமைக்கப்படும். இதனால், ரூ.200 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 2,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

> உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் தங்கள் இடத்தில் இருந்தபடியே தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து சுலபமாக முடிவுகள் எடுக்க வழிவகுத்திடும் வகையில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் குறிப்பிட்ட தொழிற்பூங்காக்கள் மற்றும் ஆயத்த தொழிற்கூடங்கள் ஆகியவற்றின் மெய்நிகர் பிரதிகள் (virtual walk-through) வழிகாட்டி நிறுவனத்தால் உருவாக்கப்படும்.

> வழிகாட்டி நிறுவனம் வழங்கி வரும் முதலீட்டு சேவைகளின் புதிய பரிணாமமாக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முதலீடு தொடர்பான தகவல்களை பல்வேறு மொழிகளில் அளிக்கக்கூடிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படும்

> சிப்காட் தொழிற்பூங்காக்களின் தோற்றப்பொலிவை உலக தரத்திற்கு ஈடாக மேம்படுத்த ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கப்படும்.

> தருமபுரி மாவட்டத்திலும், திருவள்ளூர் மாவட்டம் – மாநல்லூரிலும் அமையப் பெற்றிருக்கும் சிப்காட் தொழிற்பூங்காக்களில் தொழிற்சாலைகள் அமைக்கும் பணியை திறம்பட செயல்படுத்துவதற்காக ரூ.5 கோடி திட்ட மதிப்பீட்டில் சிப்காட் நிர்வாக அலுவலக கட்டடங்கள் கட்டப்படும், என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!