மே 10 அன்று இரு நாடுகளும் முடிவு செய்தபடி, எல்லை தாண்டிய அனைத்து இராணுவ நடவடிக்கைகளுக்குமான இடைநிறுத்தத்தை நீட்டிக்க இந்தியாவும் பாகிஸ்தானும் கூட்டாக ஒப்புக் கொண்டுள்ளன.
தொடர்ச்சியான பதட்டங்களுக்கு மத்தியில், இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் ஜெனரல்கள் (DGMOs) “நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை” தொடர வியாழக்கிழமை (15) பிற்பகுதியில் முடிவு செய்துள்ளனர்.
PTI செய்திச் சேவையின் அறிக்கையின்படி, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் டார், பாகிஸ்தான் DGMOs மேஜர் ஜெனரல் காஷிஃப் அப்துல்லா மற்றும் இந்திய DGMOs லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் ஆகியோர் வியாழக்கிழமை ஒரு மெய்நிகர் சந்திப்பில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து மேற்கண்ட தீர்மானத்துக்கு வந்துள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கியது.
எல்லைக்கு அருகிலுள்ள இராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியதை அடுத்து, ஒரு நாள் கழித்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்தன, அந்த தாக்குதலை இந்தியா முறியடித்தது.
மூன்று நாட்கள் கடுமையான இராணுவ தாக்குதல்களுக்கு பின்னர், மே 10 அன்று பாகிஸ்தான் DGMOs தனது இந்தியப் பிரதிநிதியை அழைத்து எல்லை தாண்டிய அனைத்து வகையான துப்பாக்கிச் சூடுகளையும் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து, இரு நாடுகளும் இரு தரப்பிலிருந்தும் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த ஒப்புக்கொண்டன.
இருப்பினும், எல்லைக் கிராமங்களில் இருந்து கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான சில மணி நேரங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறியதாகவும் குற்றச்சாட்டப்பட்டது.