இலங்கை கிரிக்கட் துறையின் ஜாம்பவான்களாக போற்றப்படும் மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் மீது தீவிர குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முன்னிலை சோசலிச கட்சியினால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
விடத்தல்தீவு பிரதேசத்தில் சங்கக்கார மற்றும் மஹேல ஆகியோர் சுற்றுச் சூழலுக்கு பாதகம் ஏறப்டுத்தக் கூடிய வகையில் சுமார் 400 ஏக்கர் காணியில் வர்த்தக நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் காணியில் பாரிய அளவில் நண்டு மற்றும் இறால் பண்ணை நடத்தி வருவதாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதி பறவைகள் சரணாலயப் பகுதி எனவும் இதில் பண்ணை அமைத்தமை சுற்றுச் சூழலுக்கு எதிரான செயல் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த பண்ணைகள் அமைப்பதற்கு கடந்த அரசாங்கங்கள் அனுமதி வழங்கியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தக் காணிகளை அவர்கள் எவ்வாறு கொள்வனவு செய்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் இந்தக் காணிக் கொள்வனவு மற்றும் பண்ணை நடாத்திச் செல்வது தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என்பது பற்றிய துல்லியமான சாட்சியங்களையோ அல்லது வேறும் விபரங்களையோ அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.