ஜமைக்காவில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகளை வெறும் 27 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து, 176 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் பெறப்பட்ட இரண்டாவது குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இது அமைந்தது.
முன்னதாக 1955 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து 26 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
சபினா பார்க்கில் திங்கட்கிழமை (14) 204 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்திய மேற்கிந்தியத் தீவுகள் அணி, மிட்செல் ஸ்டார்க்கின் ஆறு விக்கெட்டுகள் மற்றும் ஸ்காட் போலண்டின் ஹெட்ரிக் மூலம் 14.3 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு சுருண்டது.
மிட்செல் ஸ்டாக் பின்னர் போட்டியின் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
அவர் இன்னிங்ஸின் தொடக்க ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, 15 பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார்.
தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஸ்டார்க் 7.3 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகள் என்ற தனது சிறந்த பந்து வீச்சினை இந்த இன்னிங்ஸில் பதிவு செய்தார்.
மேலும், இந்தப் போட்டியில் ஸ்டார்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளைக் கடந்தார்.
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஒரு சாதனையை பதிவு செய்தார்.
தேநீர் இடைவேளைக்குப் பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணியின் கீழ் வரிசையில் ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷமர் ஜோசப் மற்றும் ஜோமல் வாரிக்கன் ஆகியோரை தொடர்ச்சியான பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்து ஆண்கள் டெஸ்ட் போட்டிகளில் ஹெட்ரிக் எடுத்த பத்தாவது அவுஸ்திரேலியர் ஆனார் போலண்ட்.
இந்த வெற்றியுடன் பிராங்க் வொரல் தொடரினை அவுஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.