மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வில் இதுவரை சுமார் 1002 பேர் உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நில அதிர்வில் 2,376பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளதுடன் ,
உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஐயம் நிலவுவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த நிலநடுக்கம் தாய்லாந்தையும் தாக்கியதால் தலைநகர் பெங்கொக்கில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாய்லாந்தில் நில அதிர்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த நாட்டு நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
மியன்மாரில் நில அதிர்வில் சிக்குண்டு பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு உதவும் வகையில் இரத்த தானம் மற்றும் மருத்துவ பொருட்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், அத்திலாந்திக் பெருங்கடலில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
பிரேசிலிலிருந்து 585 கிலோமீட்டர் தொலைவில் அத்திலாந்திக் பெருங்கடலில் 6.4 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, இன்று அதிகாலை ஆப்கானிஸ்தானில் 4.2 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஜூர்மிலிருந்து தென்கிழக்கே 24 கிலோ மீற்றர் தொலைவில் 226.9 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேதவிபரங்கள் குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது
இந்நிலையில், மியன்மார் நில அதிர்வை அடுத்து காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக சீனா மீட்பு குழுவொன்றை அனுப்பியுள்ளது.
இந்த மீட்பு குழுவில் வைத்தியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 37 பேர் கொண்ட சீன மீட்பு குழு இன்று மியன்மாரை சென்றடையவுள்ளது.
மியன்மாருக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு சீனா தயாராகவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை உணவு , போர்வைகள் , மருந்து , மின்பிறப்பாக்கி என 15 டன் நிவாரண பொருட்களை இந்தியா மியன்மாரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அனுப்பியுள்ளது.
இந்திய விமானப்படை விமானம் மூலம் 15 டன் நிவாரணப் பொருட்கள் மியான்மருக்கு வெளியுறவுத்துறை அனுப்பி வைத்தது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய விமானப்படையின் C17 விமானம் இன்று அதிகாலை 4 மணியளவில் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை நிலையத்திலிருந்து மியான்மருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் கூடாரங்கள், போர்வைகள், உணவு, தண்ணீர் சுத்திகரிப்பான்கள், சுகாதார கருவிகள், சூரிய விளக்குகள், அத்தியாவசிய பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மீட்புக்குழுவும் செல்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்