நேப்பிடா: மியான்மரை வெள்ளிக்கிழமை 7.7 அளவில் தாக்கிய சக்தி வாய்ந்த பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1644 ஆக அதிகரித்துள்ளது. அதன் அண்டை நாடான தாய்லாந்தில் 17 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மியான்மரின் மாண்டலே பகுதியில் இன்று (மார்ச் 30) தாக்கிய பின்அதிர்வுகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பூகம்பத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மாண்டலே நகரில் ஞாயிற்றுக்கிழமை தாக்கிய பின்அதிர்வுகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர். முதலில் லேசாக தொடங்கிய அதிர்வு பின்பு 6.7 அளவில் தீவிரமடைந்தது.அதேபோல், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,408 ஆகவும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 139 ஆகவும் அதிகரித்துள்ளது.
இது சுமார் நகரில் வசிக்கும் 1.7 மில்லயன் மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பூகம்பத்தில் உயிர்பிழைத்திருப்பவர்கள் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருப்பவர்களைத் தேடி வருகின்றனர்.
டீ கடை வைத்திருந்த வின் லிவின் இடிந்து விழுந்த தனது கடையின் செங்கல்களை அப்புறப்படுத்திய படி, “இங்கு ஏழு பேர் இறந்தனர். இன்னும் ஏதாவது உடல்கள் இருக்கிறதா எனத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் யாரும் உயிர்பிழைத்திருக்க முடியாது எனக்குத் தெரியும்.” என்றார்.
போர் நிறுத்தம் அறிவிப்பு.. இந்தப் பேரழிவுகளுக்கு மத்தியில், மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடி வரும் நிழல் தேசிய ஒற்றுமை அரசு (என்யுஜி) மீட்பு மற்றும் நிவாரண பணிகளை எளிதாக்கும் வகையில் நாட்டில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் சில குறிப்பிட்ட பகுதியில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
அதேபோல், மியான்மரின் நிழல் தேசிய ஒற்றுமை அரசு. இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவின் உதவியுடன் நிவாரண மீட்பு முயற்சிகளை எளிதாக்கும் வகையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு வாரத்துக்கு போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இதனிடையே திறம்பட செயல்படுவதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மியான்மரில் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதேநேரதில் இதுபோன்ற பேரழிவுகளை எதிர்கொள்ளும் வகையில் நாடு தயாராக இல்லை என்று சர்வதேச உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பூகம்பம் தாக்குவதற்கு முன்பு, மியான்மர் உள்நாட்டு போர் பாதிப்பில் சிக்கியிருந்தது. இந்த உள்நாட்டுப்போர் 3.5 லட்சம் மக்களை இடம்பெயரச் செய்ததுடன் பலரை பட்டினியில் வாடும் நிலைக்கு தள்ளியிருந்தது.
அண்டை நாடான தாய்லாந்தின் பாங்காகில் கட்டுமானத்தில் இருந்த வானுயர்ந்த 30 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர், 32 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 83 பேரைக் காணவில்லை. இடிபாடுகளில் யாராவது உயிருடன் இருக்கின்றனரா என்பதைக் காண்டறிய மீட்டுபுக்குழுவனர் அகழாய்வு இயந்திரங்கள், மோப்ப நாய்கள் மற்றும் வெப்ப சலனத்தை உணரும் ட்ரோன்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.