உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தில் வளர்ச்சி கவலைகள் அதிகரித்து வருவதால், இந்தியாவின் ரிசர்வ் வங்கி (RBI) இன்று அதன் கொள்கை விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6% ஆகக் குறைத்துள்ளது.
ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான இந்திய மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (MPC) ஏப்ரல் 7 ஆம் திகதி தொடங்கிய அதன் மூன்று நாள் கூட்டத்தை முடித்த பின்னர் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
இது 2022 செப்டெம்பர் மாதத்துக்குப் பிறகு அதன் மிகக் குறைந்த அளவைக் குறிக்கிறது.
வளர்ந்து வரும் பெரிய பொருளாதார, நிதி நிலைமைகளின் கண்ணோட்டத்தின் விரிவான மதிப்பீட்டிற்குப் பின்னர் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6% ஆக உடனடியாக அமலுக்கு கொண்டுவர ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டதாக சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார்.
2024 டிசம்பரில் ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து சஞ்சய் மல்ஹோத்ரா ஆற்றும் இரண்டாவது முக்கிய உரை இதுவாகும்.
பணவீக்கம் 4% க்கும் குறைவாகக் குறைந்துள்ள நிலையில், மெதுவான பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேவையை ஆதரிப்பதற்கும் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் இந்திய மத்திய வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பணப்புழக்க சரிசெய்தல் வசதியின் கீழ் நிலையான வைப்பு வசதி (SDF) விகிதம் 5.75% ஆகவும், துணைநில் கடன் வழங்கல் வசதி விகிதம் (MSF) 6.25% ஆகவும் சரிசெய்யப்பட்டது.
புதன்கிழமை நடைபெற்ற அதன் அண்மைய நாணயக் கொள்கைக் குழு (MPC) கூட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி, 2025-26 நிதியாண்டிற்கான அதன் வளர்ச்சி கணிப்பை 6.5% ஆகக் குறைத்தது.
இது பெப்ரவரியில் செய்யப்பட்ட அதன் முந்தைய மதிப்பீட்டான 6.7% இலிருந்து 20 அடிப்படை புள்ளிகள் குறைப்பு ஆகும்.