உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் அரசாங்கத்துடன் இருப்பதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இஸ்லாமிய கடும்போக்குவாத கொள்கையுடைய பலர் ஆளும் கட்சிக்குள் அடைக்கலம் புகுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக கடமையாற்றி வரும் முனீர் முலாபர் இஸ்லாமிய கடும்போக்குவாதத்தை ஊக்குவிக்கும் நபர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நிட்டம்புவ பகுதியில் தன்வீர் அகடமியின் பொறுப்பாளராக முனீர் கடமையாற்றி வருவதாகவும், கடவுளுக்காக உயிர்த்தானம் செய்ய வேண்டுமென வலியுறுத்தும் குழுவொன்றை முனீர் வழிநடத்துவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தை விடவும் இந்த அரசாங்கம் இஸ்லாமிய கடும்போக்குவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் மெத்தனப் போக்கினை பின்பற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தம்மை கல்லால் அடித்து கொலை செய்ய வேண்டுமென கிழக்கு மாகாணத்தில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களது கொள்கை ரீதியான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உலக அளவில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதாகவும், சிங்களவர்களுக்கு இருக்கும் ஒரே நாடு இந்த இலங்கை மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.