முஸ்லிம் பெண்கள் பின்தங்கி இருக்கிறார்கள் என்ற காலாவதியான கருத்தை அகற்றுவோம் – பிரதமர் ஹரிணி

இலங்கையில் உள்ள அனைத்து பெண்களும் சிறப்பான முன்னேற்றத்தை அடையவும் தங்கள் ஆற்றல்களை முழுமையாகப் பங்களிப்பதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஏப்ரல் 07 ஆம் திகதி கொழும்பில் உள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற IMRA மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “IMRA சிறப்பு விருது விழா 2025” நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

“நாம் இங்கு கூடியிருப்பது, சாதனைகளைக் கொண்டாடுவதற்காக மட்டுமன்றி, இலங்கை முழுவதும் உள்ள முஸ்லிம் பெண்களின் வியத்தகு பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காகவும் ஒன்றுகூடியிருக்கிறோம். இந்த சாதனைப் பெண்கள் தங்கள் ஆற்றல்கள், உறுதிப்பாடு மற்றும் சிறந்து விளங்குவதற்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்க IMRA மன்றம் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சட்டம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முதல் கல்வி, ஊடகம் மற்றும் தொழில்முயற்சி வரை பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தியிருக்கும் இந்த பெண்கள் எமது சமூகத்தில் வெறும் பங்கேற்பாளர்கள் மட்டுல்ல. அவர்கள் அதன் எதிர்காலத்தை வடிவமைப்பவர்கள்.

ஏனைய பல துறைகளுக்கு மத்தியில் எமது கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் தொழில்முயற்சியாளர்களில் குறிப்பிடத்தக்க புத்தாக்கத்தையும், ஊக்கமளிக்கும் அர்ப்பணிப்பையும் நாம் கண்டுள்ளோம். சமூகத்தில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், இந்த பெண்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளனர் என்பது தெளிவாகிறது, இது அவர்கள் தேர்ந்தெடுத்த தொழில்களில் எமது தேசத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக மாறுவதைக் காட்டுகிறது.

முஸ்லிம் பெண்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்ற காலாவதியான கருத்தை அகற்றுவோம். மாறாக, அவர்கள் முன்னணியில் உள்ளனர், வலிமை, ஞானம் மற்றும் கனிவுடன் முன்னணியில் உள்ளனர். அவர்கள் முன்மாதிரிகள், அவர்கள் தங்களது சமூகங்களுக்கு மட்டுமன்றி, முழு இலங்கை தேசத்தையும் ஊக்குவிக்கிறார்கள். நான் புரிந்துகொண்டபடி, IMRA மன்றத்தின் நோக்கம், இந்த சிறப்புவாய்ந்த குழுவின் அசாதாரண திறமைகள் மற்றும் பங்களிப்புகளைக் கொண்டாடுவதன் மூலமும் அங்கீகரிப்பதன் மூலமும், எதிர்மறையான படிவார்ப்பு சிந்தனைகள் எவ்வளவு தவறாக வழிநடத்தும் என்பதை வெளிப்படுத்துவதாகும், இதன் மூலம் பரந்த சமூகத்திற்கு முன்மாதிரிகளை உருவாக்குவதாகும்.

முஸ்லிம்கள் பற்றிய ஒருபடித்தான கருத்துக்களை (stereotypes) அகற்றுவது எவ்வளவு முக்கியமோ, அதே நேரத்தில் இலங்கையில் பொதுவாகப் பெண்கள் பற்றிய பல கருத்துக்களை பெண்ணின வெறுப்பு நம்பிக்கைகள் வடிவமைக்கின்றன என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அதிகரித்து வரும் வீட்டு வன்முறை, இணைய துஷ்பிரயோகம், அரசியலில் மற்றும் அதிக அளவிலான முடிவெடுப்பதில் பெண்களின் குறைந்த பங்களிப்பு மற்றும் அரசியல், வர்த்தகம் அல்லது வேறு எந்தத் துறையாக இருந்தாலும், பெண்கள் மீதான கடுமையான தாக்குதல்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொள்ளும்போது இது தெளிவாகிறது.

இதனை ஒரு குறிப்பிட்ட இனக்குழுமத்தின் பிரச்சினையாகவன்றி ஒரு மொத்த சமூகப் பிரச்சினையாக அங்கீகரிப்பது முக்கியம் – இதனை ஒரு இனக்குழுமத்தின் பிரச்சினையாக பார்ப்பதுவும் ஒரு படிவார்ப்பு சிந்தனையாகும்.

நாம் இச்சந்தரப்பத்தில் தனிப்பட்ட சாதனைகளை மட்டுமன்றி, இலங்கை முஸ்லிம் பெண்களின் கூட்டு வலிமையையும், மீளாற்றலையும் கொண்டாடுகிறோம். ஒரு பிள்ளையை வளர்ப்பதற்கு ஒரு கிராமமே தேவை என்பது எங்களுக்குத் தெரியும், பெண்களை மேம்படுத்துவதற்கு அதனைப்பார்க்கிலும் கூடிய ஆதரவு தேவை. இங்கு நாம் கொண்டாடும் இந்த அடைவுகள் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்கின்றன, அவை எதிர்கால சந்ததியினருக்கான பாதையை ஒளிரச் செய்கின்றன.

நாம் முன்னேறிச் செல்கின்றோம் என்ற வகையில், ஒவ்வொரு பெண்ணும் தனது கனவுகளைத் தொடரவும், தடைகளைத் தகர்க்கவும், எமது இந்த அழகிய தேசத்திற்கு வளம் சேர்க்கவும் வலுவூட்டப்பட்டவர்களாக உணரும் ஒரு சூழலை உருவாக்க நாம் தொடர்ந்து பாடுபடுவோம்.

இன்று நாம் கொண்டாடும் இந்த சாதனைகள் அனைவரையும் வலுவூட்டுவதையும் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதையும் உறுதி செய்வோம். “

இவ்விழாவில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பின்வரும் விருதுகளையும் வழங்கிவைத்தார்.

IMRA  சிறப்பு விருதுகள் சட்டத்துறை திருமதி சஈதா பாரி, கலை மற்றும் கலாசாரம் – அமீனா ஹுசைன், புலமைப்பரிசில் மற்றும் கல்வி – ரமோலா ரசூல், சுகாதாரம் மற்றும் மருத்துவம் – பேராசிரியர் பசீஹா நூர்தீன், கட்டிடக்கலை – ஷெஹெலா லத்தீஃப், ஷிஹெலா லத்தீஃப், ஊடகம் மற்றும் தொடர்பாடல் சியாமா யாகூப்,  IMRA வளர்ந்து வரும் நட்சத்திர விருது விளையாட்டுத் துறை – ஹம்னா கிசார், கல்வி – சாஜிதா ராசிக், ரிஸ்கா நௌஷாத், மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் சந்ரா வந்துராகல, சிவநந்தினி துரைசாமி, சுனேலா ஜெயவர்தன மற்றும் அன்பேரியா ஹனிஃபா ஆகியோருக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப், முன்னாள்  அமைச்சர் ஃபெரியல் அஷ்ரப் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏராளமான தொழில்முயற்சியாளர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!