சென்னை: புதிய சஸ்பென்சன், எல்இடி லைட் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் ராயல் என்பீல்ட் நிறுவனம் புதிய புல்லட் ‘ஹண்டர் 350’ மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் கிளாசிக் 350, மீட்டியர் 350, ஹிமாலயன் போன்ற மாடல்கள் வாகன ஓட்டிகளிடம் கவனம் பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக ‘ஹண்டர் 350’ மாடல் 2022 ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அதன் மேம்படுத்தப்பட்ட மாடல் வகை நேற்று முன்தினம் டெல்லி மற்றும் மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது. டேப்பர் கிரே, ரிபல் ப்ளூ வகைகளுடன் புதிதாக டோக்கியோ பிளாக், லண்டன் ரெட், ரியோ வைட் ஆகிய நிறங்களில் 2025-ம் ஆண்டின் ‘ஹண்டர் 350’ அறிமுகமாகியுள்ளது. புதிய சஸ்பென்சன், எல்இடி லைட், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச், வழிகாட்டும் டிரிப்பர் என பல்வேறு நவீன வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி யத்விந்தர் சிங் குலேரியா மற்றும் தயாரிப்பு உத்திகள் பிரிவு நிர்வாகி அனிஷ் அருண் ஆகியோர் கூறியதாவது: தினமும் மாறிவரும் உலகில் ராயல் என்பீல்ட் காலத்தால் அழிக்க முடியாத அடையாளமாக உள்ளது. மக்களிடம் தனி இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான ராயல் என்பீல்ட் வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.சர்வதேச சந்தையில் 1.07 லட்சமும், உள்நாட்டு சந்தையில் (இந்தியா) 9.32 லட்சமும் வாகனங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ராயல் என்பீல்ட் சார்பில் 2022-ல் அறிமுகம் செய்யப்பட்ட ‘ஹண்டர் 350’ வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 5 லட்சம் பேர் இதை வாங்கியுள்ளனர். 6 மாதங்களுக்கு ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் ஹண்டரை வாங்கி வருகின்றனர். எனவே, இதை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்லும் வகையில் ‘ஹண்டர் 350’-யை மேம்படுத்தியிருக்கிறோம். அதன்படி, ஹெட் லேம்ப், ஹாலோஜன் லைட்டில் இருந்து எல்இடியாக மாற்றப்பட்டிருக்கிறது. நெடுந்தூரப் பயணங்களுக்கு உதவும் வகையில் ‘டிரிப்பர்’ எனப்படும் திருப்பங்களுக்கான வழிகாட்டும் கருவி (நேவிகேஷன்) பொருத்தப்பட்டுள்ளது. இது ராயல் என்பீல்ட் செயலியுடன் இணைந்து செயல்படும்.
பழைய 2022 மாடலில் சார்ஜிங் வசதிக்காக இடம்பெற்றிருந்த ‘டைப்-ஏ’ யுஎஸ்பி தற்போது மாற்றப்பட்டு 27 வாட்ஸுடன் கூடிய ‘டைப்-சி’ போர்ட்டாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த மாடலைவிட 30 சதவீதம் வேகமாக செல்போன்களை சார்ஜ் செய்ய முடியும். அதேபோல, 350 சிசி வாகனங்களில் முதல்முறையாக ‘ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச்’ எனப்படும் கிளட்ச் வகையை ஹண்டருக்கு பொருத்தியிருக்கிறோம். இதன்மூலம் கிளட்ச்சின் அழுத்தம்குறைவாக இருக்கும். அதனால் நகரப் பகுதிகளில் அடிக்கடி கியர் மாற்றுவது எளிதாக இருக்கும்.கடந்த மாடலில் தரைதளத்தில் இருந்து 150 மி.மீ. உயரத்தில் மட்டுமே சைலென்சர் இருந்ததால், ஸ்பீட் பிரேக்கர்களில் செல்ல கடினமாக இருந்ததாக சிலர் தெரிவித்திருந்தனர். எனவே, சைலென்சரை மாற்றியமைத்து, அந்த இடைவெளியை 160 மி.மீ. ஆக உயர்த்தியிருக்கிறோம்.
அதேபோல, கடந்த மாடலில் சஸ்பென்சன் கடினமாக இருந்ததால் வாகனத்தை ஓட்டுவதற்கு சவுகரியமாக இல்லை என்றும் சிலர் தெரிவித்தனர். எனவே, ஹேண்டிலிங் மற்றும் சவுகரியத்துக்காக இரட்டை ஸ்பிரிங்குடன் கூடிய சஸ்பென்சனை வடிவமைத்து இருக்கிறோம். இத்துடன் சீட்டிலும், ஹேண்டில்பாரிலும் மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறோம். இதன்மூலம் பயணம் மிகவும் சவுகரியமாக இருக்கும். அந்தவகையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதிய ‘ஹண்டர் 350’ பேஸ் விலை ரூ.1.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிட் வேரியண்ட் (ரியோ வைட், டேப்பர் கிரே) வகையின் விலை ரூ.1.76 லட்சமாகவும், டாப் வேரியண்ட் (டோக்கியோ பிளாக், லண்டன் ரெட், ரிபல் ப்ளூ) வகையின் விலை ரூ.1.81 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.