ரிசர்வ் வங்கி கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு ஒரு வாரத்தில் ரூ.12,000 கோடி அதிகரித்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் புதிய வரி விதிப்புகள், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருவது, திருமண சீசன் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 11-ம் தேதி நிலவரப்படி டெல்லியில் 10 கிராம் தங்கத்தின் விலை (24 கேரட்) ரூ.93,353 ஆக இருந்தது. நேற்றைய நிலவரப்படி டெல்லியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.97,730 ஆக அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.10 லட்சமாக அதிகரிக்கும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணித்திருக்கிறது.
தங்கம் விலை உயர்வு காரணமாக ரிசர்வ் வங்கி கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு கணிசமாக அதிகரித்து உள்ளது. அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.12,000 கோடி அதிகரித்திருக்கிறது. இதன்படி ரிசர்வ் வங்கியிடம் உள்ள தங்கத்தின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.6,88,496 கோடியாக உயர்ந்துள்ளது.