வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்த இளம்பெண் – Athavan News

ஷார்ஜாவில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமையால், கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர்  தனது ஒன்றரை வயது மகளை கொலை செய்து விட்டு, தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணமான 78 நாட்களில் ரிதன்யா என்ற இளம்பெண், கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதேபோன்ற ஒரு சம்பவம் கேரள பெண்ணுக்கு நிகழ்ந்துள்ளது. திருமணமான உடன் கணவரை நம்பி வெளிநாடு நாடு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தின் பின்னணி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபன்சிகா மணியன். 32 வயதான இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு நிதிஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. விபின்சிகாவுக்கு தந்தை இல்லாதபோதும் அவரின் தாயார், தனது சக்திக்கு மீறி வரதட்சணையாக நகைகள் மற்றும் பணம் கொடுத்து மகளுக்கு விமரிசையாக திருமணம் நடத்தி வைத்துள்ளார்.

நிதிஷ் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருடன், அவரின் தந்தை மற்றும் தங்கை நீத்து பென்னியும் உடன் இருந்துள்ளனர். திருமணமான சில நாட்களில் மனைவி விபன்சிகாவையும், ஷார்ஜாவுக்கு நிதின் அழைத்துச் சென்றுள்ளார். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்தது. கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அண்மைக் காலமாக தம்பதிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விபன்சிகா தனது மகளை தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விபன்சிகாவின் தாயார் ஷியாமளா, கொல்லத்தில் உள்ள குந்தாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில்இ தனது மகளிடம் வரதட்சணை கேட்டு, அவரின் கணவர் நிதிஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக விபன்சிகா அழகாய் இருப்பது கணவர் குடும்பத்தினரின் கண்களை உறுத்தியுள்ளது. தாங்கள் கறுப்பாக இருக்கையில் நீ மட்டும் எப்படி வெள்ளையாய் இருக்கலாம் என அடித்து உடலில் காயப்படுத்தியுள்ளனர்.

கொடூரத்தின் உச்சமாக விபன்சிகாவின் தலைமுடியை வெட்டியதுடன், மொட்டையும் அடித்து விட்டுள்ளனர். இதையடுத்து, தனக்கு நேர்ந்த சித்ரவதைகளை சகித்துக் கொண்ட இளம்பெண், கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததும் கொதித்தெழுந்துள்ளார்.

அதுகுறித்து, கேள்வி கேட்டதற்காக கணவர் நிதிஷ் விவாகரத்து நோட்டீஸ் வழங்கியதாகவும் விபன்சிகாவின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கணவர் நிதிஷ் மற்றும் அவரின் தங்கை நீத்து பென்னி, தந்தை மீது குந்தாரா பொலிஸார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, தற்கொலை முடிவுக்கு கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரே காரணம் என விபன்சிகா தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அத்துடன், அவர் கைப்பட எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், தனது கணவர் மட்டும் இன்றி அவரின் தந்தையும் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதுகுறித்து கணவரிடம் புகார் கூறியதற்கு,அவர் ”உன்னை தனக்கு மட்டும் இன்றி, தனது தந்தைக்காகவுமே திருமணம் செய்ததாகக் கூறி கதிகலங்க வைத்துள்ளார். மேலும் ஆபாச படங்களை பார்த்து, தன்னை பாலியல் ரீதியாகவும் கணவர் கொடுமைப் படுத்தியதாகவும் அப்பாவிப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தத்தில் தன்னை ஒரு நாயைப்  போன்று நடத்தியதால், வேறு வழியின்றி விபரீத முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக விபன்சிகா தெரிவித்துள்ளார்.

தன்னை இந்த நிலைக்கு தள்ளிய கணவன் மற்றும் அவரின் தங்கை, தந்தையை விட்டுவிடாதீர்கள் என்று அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மூன்று பேரையும் கேரளாவுக்கு வரவழைத்து விசாரணை நடந்த பொலிஸார்  தீவிரம் காட்டி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply