வார்ப்பட தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும் மின்சார வாகனங்கள்: கோவை தொழில்துறையினர் தகவல் | Electric vehicles to help growth of the casting industry

கோவை: மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வருவது வார்ப்பட தொழில்துறை சிறப்பான வளர்ச்சியை பெற வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது என்றும் டிராக்டர், கார் துறைகளில் இருந்து பணி ஆணைகள் அதிகளவு பெறப்படுவதாக கோவை தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய உற்பத்தித் துறையில் வார்ப்படம் (casting) தொழில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் மொத்த வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ளது. உலக அளவில் மிக அதிகளவு வார்ப்படம் உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமையை இந்தியா கொண்டுள்ளது. நாடு முழுவதும் 5,000 வார்ப்படம் உற்பத்தி தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுதோறும் 9 மில்லியன் மெட்ரிக் டன் எடையிலான வார்ப்படம் உற்பத்தி செய்யப்படுகிறது. போதிய அளவு மூலப்பொருட்கள் இருப்பு, திறன்வாய்ந்த தொழிலாளர்கள் இவை எல்லாவற்றுக்கும் மேல் உள்நாட்டு சந்தையில் வார்ப்படம் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தொழில் நிலையான வளர்ச்சியை பெற்றுள்ளது.

இதுகுறித்து ‘தி இன்ஸ்டியூட் ஆப் இந்தியன் பவுண்டரிமென்’(ஐஐஎப்) தேசிய பொருளாளர் முத்துக்குமார் கூறியதாவது: பல்வேறு துறைகளுக்கு வார்ப்படம் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்துப்படும் போதும், ஆட்டோ மொபைல் துறை தான் மிக அதிக அளவு வார்ப்படத்தை பயன்படுத்துகிறது. அதை தொடர்ந்து உள்கட்டமைப்பு, ரயில்வே, விண்வெளி உள்ளிட்ட பிற துறைகளில் வார்ப்படம் அதிகம் பயன்படுகிறது. மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வருவது வார்ப்பட தொழில்துறை சிறப்பான வளர்ச்சியை பெற வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. மிக குறைந்த எடை, ஆனால் மிக வலிமை கொண்ட பொருட்கள் தயாரிக்க வார்ப்படம் உதவுகின்றன.

மற்ற துறைகளைப்போல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வார்ப்படம் தொழில்துறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு பின்பற்றி வந்த பழைய நடைமுறைகளுக்கு மாற்றாக அதிக தரம், நிலைத்தன்மை, திடத்தன்மை கொண்டு பொருட்கள் உற்பத்தி செய்ய உதவுகின்றன. உலகளவில் மந்தநிலை காணப்படும் நிலையிலும் இந்திய வார்ப்படம் தொழில் நிறுவனங்களுக்கு உள்நாட்டில் அமல்படுத்தப்படும் ‘மேக் இன் இந்தியா’, ‘தேசிய இன்ப்ராஸ்டரக்சர் பைப்லைன்’(என்ஐபி) போன்ற திட்டங்கள் வார்ப்பட தொழில் நிறுவனங்களுக்கு பணி ஆணைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்துகின்றன.

பசுமை திட்டங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தப்படும் சூழலில் இந்திய வார்ப்பட நிறுவனங்களும் மறுசுழற்சி நடைமுறைகளை பின்பற்றுதல், கார்பன் வாயு வெளியிடும் அளவை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல தொடங்கியுள்ளன. திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசு சார்பில் அளிக்கப்படும் முக்கியத்துவம், நிதியுதவி போன்றவை தொடர வேண்டும். உலகளவில் வார்ப்பட தேவை அதிகரித்து வருவதால் எதிர்வரும் காலங்களில் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு ஏற்றுமதி அதிகம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

வளர்ச்சிக்கு சாதகமான சூழல் வார்ப்பட தொழில்துறையில் காணப்படும் போதும் மாறி வரும் சட்டங்கள் மற்றும் சந்தை தேவைகளுக்கு ஏற்ப இந்திய வார்ப்பட தொழில்துறையினர் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் உலகளவில் காணப்படும் போட்டியை தொடர்ந்து திறமையாக எதிர்கொள்ளும் பக்குவத்தை பெற முடியும். இவ்வாறு முத்துக்குமார் தெரிவித்தார்.

‘தி இன்ஸ்டியூட் ஆப் இந்தியன் பவுண்டரிமென்’(ஐஐஎப்) கோவை கிளை முன்னாள் தலைவர் விஸ்வநாதன் கூறும்போது, “கார் உற்பத்தித்துறையில் இருந்த வார்ப்படம் பணி ஆணைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. டிராக்டர் உற்பத்தித்துறையில் அதிக பணி ஆணைகள்(80 சதவீதம் வரை) பெறப்படுகின்றன. மோட்டார் பம்ப்செட் உற்பத்தித்துறையில் பணி ஆணைகள் மிகவும் குறைந்துள்ளது. தற்போது 40 சதவீதம் மட்டுமே அத்துறையில் இருந்து வார்ப்பட தொழில் நிறுவனங்களுக்கு பணி ஆணைகள் பெறப்படுகின்றன.” என்றார்

நன்றி

Leave a Reply

error: Content is protected !!