வெலிகம, உடுகாவ பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியாருக்குச் சொந்தமான ஆடைத் தொழிற்சாலையில் நேற்று (8) இரவு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
தமிழ் – சிங்கள புத்தாண்டு மேலதிக கொடுப்பனவை நிறுத்தும் நிர்வாகத்தின் உத்தரவுக்கு அமைவாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த நிலை ஏற்பட்டது.
இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா அண்மையில் விதித்த அதிக வரிகள் காரணமாக வருடாந்திர மேலதிக கொடுப்பனவை செலுத்த நிறுவனத்தால் முடியாது என்று நிர்வாகம் அறிவித்ததைத் தொடர்ந்து, அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் தொழிற்சாலையின் முகாமையாளரை அவரது அலுவலகத்தில் பணயக்கைதிகளாகப் பிடித்ததால் அமைதியின்மை தொடங்கியது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்த ஆண்டு மேலதிக கொடுப்பனவு தொகை வழங்கப்படாது என்று நேற்று காலை நிறுவனத்தின் நிர்வாக ஆணையம் ஊழியர்களிடம் தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
விரைவில், ஊழியர்கள் குழு ஒன்று வளாகத்தின் நுழைவாயிலைத் தடுத்து, வாயில்களைப் பூட்டி, அனைத்து செயல்பாடுகளையும் ஸ்தம்பிக்கச் செய்தது.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வளாகத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று அவர்கள் சபதம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தொழிற்சாலை நிர்வாகம் வெலிகம பொலிஸாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.