வேர்களைத்தேடி ‘ நிகழ்வின் பதினான்காவது நாளில்…
அயலகத்தமிழர் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட நான்காவது ‘ அயலகத்தமிழர் தினத்தின்’ ஆரம்ப நிகழ்வு சென்னை நத்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு சா.மு. நாசர் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
நான்காவது ‘ அயலகத்தமிழர் தினம் 2025’ ற்கான கருப்பொருளாக ‘ எத்திசையும் தமிழணங்கே’… என்ற தமிழ்த்தாய் வாழ்த்தின் அடிகள் அமைந்திருந்தன. இவ்விழாவில் கலாசாரம் , பொருளாதாரம் , கல்வி மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
அதுமட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர் நலத்துறை சார்ந்த பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமை சிறப்பம்சமாகும்.
உலகத்தமிழர்களின் பண்பாட்டு பாரம்பரியப் பங்களிப்புகளை நினைவுகூரும் இந்த நிகழ்வினை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.
உலகெங்கும் உள்ள தமிழர்களின் ஒற்றுமையையும் உறுதியையும்பற்றி எடுத்துரைத்த அவர் , அயலகத்தமிழர் நலன் தொடர்பில் தமிழக அரசு கொண்டுள்ள அக்கறையையும் , அயலகத்தமிழர் தொடர்பாக தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகளையும் பற்றி எடுத்துரைத்தார்.’ வேர்களைத்தேடி ‘ நிகழ்வில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்களுக்குத் தங்கள் தமிழ் பாரம்பரியத்தின் பெருமையை உணரவேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.
நிகழ்வில் அயலக நாடுகளில் தமிழ்வழிக் கல்வி தொடர்பான கண்காட்சியும் புலம்பெயர் தமிழர்களின் தொழில் முயற்சி வளர்ச்சி என்பது பற்றிய கருத்தரங்கும் இடம்பெற்றன.
நிகழ்வின் ஒரு பகுதியாக பாரம்பரிய இசை,நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்த நாம் தமிழ் கலாசாரத்தின் வளமான பாரம்பரியத்தை உணர்ந்து நெகிழ்ந்தோம்.
நிகழ்வின்போது எமக்கு மிகவும் சிறப்பான முறையில் தயாரித்து வழங்கப்பட்ட பல்வகைப்பட்ட உணவுகளை உண்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தது.
மதிய போசனத்தின் பின் நாம் அனைவரும் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
மறுநாள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘ அயலகத் தமிழர்தின நிகழ்வுகளில் ‘ அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்த உள்ளார் என்பதும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு எமக்கு வழங்கப்பட இருக்கிறது என்பதையும் அறிந்து மகிழ்ச்சியில் மிதந்தோம்.
அந்த இனிய அனுபவத்தோடு ‘ வேர்களைத்தேடி’ பண்பாட்டுப் பயணத்தின் இறுதிநாள் அனுபவத்தையும் எனது அடுத்த பதிவில் தர உள்ளேன். அதுவரை விடைபெற்றுக் கொள்வோமா?