இளங்கோ பாரதியின் அழகிய அனுபவங்கள் 16 (12.01.2025 )
‘ வேர்களைத்தேடி ‘ நிகழ்ச்சியின் பதினைந்தாவது மற்றும் இறுதிநாள், உணர்ச்சி மிக்க மறக்க முடியாத நாளாக எமக்கு அமைந்தது. ‘ அயலகத்தமிழர் தினம் 2025 ‘ கொண்டாட்ட நிகழ்வில் அணிவதற்கென்று முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமாக வழங்கப்பட்ட தமிழர் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஆடைகளை அணிந்து விழா இடம்பெற்ற மண்டபத்தில் நாம் மகிழ்ச்சிப் பெருக்கோடு சுற்றிச் சுற்றிவந்த காட்சி பார்வைக்கு அழகானது மாத்திரமன்றி மனதுக்கும் இரம்மியமானது.
அரங்கம் நிறைந்த தமிழ் பற்றாளர்கள் , அறிஞர் பெருமக்கள் , ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளிலிலிருந்து வருகைதந்து தமது தமிழ்ப் பற்றையும் , தமிழ் மண்மீதுகொண்ட தீராக் காதலையும் வெளிப்படுத்திய தமிழ் பேராளர்கள் , அவர்கள் அனைவரையும் அழைத்து அவர்களை ஒருங்கிணைத்துப் பார்த்த தமிழக அரசின் அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தின் பேராண்மை ….
இன்னுமின்னும் எத்தனையோ மகிழ்ச்சிப் பூக்களை வாரியிறைத்து மனதை நெகிழ்ச்சிப்படுத்தியிருந்தது தமிழக அரசின் ‘ அயலகத் தமிழர் தின நிகழ்ச்சித் திட்டம் ….
கொண்டாட்ட நிகழ்வுகள் யாவும் மிகவும் கோலாகலமான முறையில் திட்டமிட்டபடி, திட்டமிட்ட ஒழுங்கிலே இடம்பெற்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள்’ நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு , இந்த நாளை மேலும் சிறப்பானதாக மாற்றினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தன் உரையில் தமிழக அரசினால் அயலகத் தமிழர் நலன் தொடர்பில் முன்னெடுக்கப்படும் பல்வேறு செயற்திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார். அயலகத்தமிழர் நலன் தொடர்பில் தமிழக அரசுக்கு உண்டான கரிசனையையும், தமிழையும் தமிழர்களையும் காப்பதில் அரசு கொண்டுள்ள அக்கறையையும் வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து தனது உரையில் ‘ வேர்களைத்தேடி’ …திட்டம் தனது மனதுக்குப் பெரிதும் நெருக்கமான ஒன்று என நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்நிழ்ச்சித் திட்டத்தின் மூலம் பல்வேறு காரணங்களுக்காகத் தமிழகத்தை விட்டுச்சென்று வேறுநாடுகளில் வசித்துவரும் தமிழர்களின் வாரிசுக்கள் தமிழகத்தில் உள்ள தமது ‘வேர்களைக் கண்டறிந்து சிலிர்ப்பதற்கான தருணங்களும் ஏற்படுத்தப்படவுள்ளன என்ற விடயத்தினை வெளிப்படுத்தினார். மேலும் நாம் நம் பாரம்பரியத்துடன் இணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர் , பங்கேற்பாளர்களின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பாராட்டினார்.
நிகழ்வின் நிறைவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பங்கேற்பாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.இது அனைவருக்கும் தங்களது வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாக அமைந்தது.
“அயலகத்தமிழர்தினக் கொண்டாட்டம் தமிழர்களின் ஒற்றுமையையும் , பாரம்பரியப்பெருமையையும் உலகறியச்செய்யும் ஒரு நிகழ்வாக அமைந்தது. “இந்நிகழ்வில் பங்கேற்கக் கிடைத்தமை எமக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.
********************”
‘அயலத்தமிழர்தினக் கொண்டாட்டங்களில் மனம் திளைத்துப்போயிருந்த பங்கேற்பாளர்கள் அனைவரும் எமது பண்பாட்டுப் பயணம் நிறைவடைந்து எமது சொந்த மண்ணை நோக்கிப் புறப்பட ஆயத்தமாகவேண்டிய வேளையையும் அண்மித்திருந்தோம். இருவாரகாலமாக தமிழக மண்ணில் நாம் சந்தித்த தமிழ் உறவுகள் அனைவரையும் பிரியப்போகின்றோம் என்ற எண்ணம் தோன்றிய மறுகணமே மனம் பிரிவுத்துயரால் கனக்க ஆரம்பித்து விட்டது.’
வேர்களைத்தேடி’ …. பண்பாட்டுப்பயணத்தில் எம்மோடு கூடவே இருந்து எமது தேவைகள் ஒவ்வொன்றையும் குறிப்பறிந்து நிறைவேற்றிய இணைப்பாளர்கள் , நாம் சென்ற இடங்கள் தோறும் கூடவே வந்து ஒவ்வொரு இடங்கள் தொடர்பாகவும் எமக்கு விளக்கமளித்த சுற்றுலாத்துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர் திருவாளர் கணேஸ் அவர்கள், எமது பயணத்தின்போது எம்மோடு கூடவே வந்து சுற்றிச் சுழன்று புகைப்படம் பிடித்த புகைப்படப்பிடிப்பாளர்கள், எமக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்கித் தன் பணியைத் திறம்பட ஆற்றிய பஸ் சாரதி , அவரோடு துணையாக வந்து எமது பயணப்பொதிகளை ஏற்றி இறக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சகோதரர்கள் , பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் மருத்துவ வசதிகளைப் புரிந்த உத்தியோகத்தர்கள் …. அத்தனைபேருக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்தபோது எமது கண்கள் கண்ணீரால் நனைந்திருந்தன.
தங்கள் குடும்பங்களைப்பிரிந்து இருவாரகாலம் எம்மோடு இணைந்திருந்த அத்தனைபேருக்கும் எம் நன்றியறிதலையும் அன்பையும் பரிமாறியவர்களாக , நெஞ்சம் நெகிழ விடைபெற்றுக்கொண்டோம்..
*’வேர்களைத்தேடி’… பயணம் நிறைவடைந்தபோது , நாம் கடந்த 15 நாட்களில் கற்றுணர்ந்த அனுபவங்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்தோம். .இது இந்தப்பயணத்தின் முடிவாக அல்லாமல் , தமிழ் பாரம்பரியத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் புதிய உறுதிமொழியின் தொடக்கமாகவும் அமைந்தது.
நிறைவான அனுபவங்கள் ….மகிழ்வான தருணங்கள் ….நெஞ்சம் நிறைந்த நன்றியைச் சுமந்தவளாக தாயகத்தை நோக்கி எனது பயணம் நகர்ந்தது. ‘வேர்களைத்தேடிச் சென்ற விழுதின் பயணமும் ‘ நிறைவுக்கு வந்தது.