“ஸுஹைல் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை” – கேள்விகளால் பொலிஸாரைத் துளைத்தெடுத்த நீதவான்

 


– Arqam Muneer –

“ஸுஹைல் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை” என்று 9 மாதங்களின் பின்னர் நீதவான் முன்னிலையில் ஒப்புக் கொண்ட தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அநுராத ஹேரத்! சாரமாரியான கேள்விகளால் பொலிஸாரைத் துளைத்தெடுத்த நீதவான் மற்றும் சட்டத்தரணிகள்! 

இன்று (09.07.2025) ஸுஹைலின் பயங்கரவாதத் தடைச்சட்ட  வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது பொலிஸ் தரப்பு சார்பாக தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) அநுராத ஹேரத், ஸுஹைல் எந்தவிதக் குற்றமும் இழைக்கவில்லை என்றும், அவரை பிணையில் விடுதலை செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் நீதவானிடம் தெரிவித்தார். 

இதன்போது, “ஏன் எந்தக் குற்றமும் இழைக்காத ஸுஹைலை இவ்வளவு நாள் பயங்கரவாதக் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தீர்கள்?” என்று பொலிஸாரிடம் வினவினார் கல்கிஸ்ஸை நீதவான்.

ஸுஹைல் சார்பாக ஆஜரான சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணிகள் ரஷாத் அஹமத், இல்ஹாம் ஹஸனலி, எம்.கே.எம். பர்ஸான் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி பர்னாந்து ஆகியோரும், “ஏன் இவ்வளவு காலம் எந்தக்குற்றமும் இழைக்காத ஸுஹைலின் வாழ்க்கையில் விளையாடினீர்கள்?” என்று பொலிஸாருக்கு எதிரான தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். 

இதன்போது நீதவான், “பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமக்கு பிணை வழங்குவதற்கான எந்த அதிகாரமும் இல்லை என்றும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யத் தெரிந்த பொலிஸாருக்கு ஏன் அதன் கீழ் நீதவானுக்கு பிணை வழங்க முடியாது என்று தெரியவில்லை என்றும், பொலிஸார் ஸுஹைலை விடுவிக்குமாறு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இவ் விசாரணையின் போது ஸுஹைல் நிகழ்நிரல் (digital hearing) மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். 

இறுதியில் சட்டத்தரணிகளின் கடும் அழுத்தத்தின் காரணமாக அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் (15.07.2025) சட்டமா அதிபரை சந்தித்து, தான் ஸுஹைலை விடுவிக்க, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு வருதாக தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அநுராத ஹேரத் உறுதியளித்தார். வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் அடுத்த தினமான வரும் செவ்வாய்க்கிழமை அன்று  (15.07.2025) நிகழ்நிரலில் அல்லாது, ஸுஹைலைத் திறந்த நீதிமன்றத்தில் (open court) ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார் கல்கிஸ்ஸை நீதவான்.

அடுத்த செவ்வாய்க்கிழமை ஸுஹைல் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு வீடு திரும்புவார் என எதிர்பார்க்கிறோம்!

– சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு 

09.07.2025.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!