தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக தலைவர்களிடமிருந்து பல கடிதங்களைப் பெற்றாலும், அவர்களில் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை என்றும், அவர்கள் தங்கள் மொழியைப் பற்றி உண்மையிலேயே பெருமைப்படுவார்கள் என்றால், குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறினார்.
ராம நவமியை முன்னிட்டு, தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து மண்டபம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இது குறித்து மேலும் பேசிய இந்தியப் பிரதமர் மோடி,
தமிழ் மொழி மற்றும் தமிழ் பாரம்பரியம் உலகின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
சில நேரங்களில், தமிழ்நாட்டின் சில தலைவர்களிடமிருந்து கடிதங்களைப் பெறும்போது நான் ஆச்சரியப்படுகிறேன் – அவர்களில் யாரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை.
நாம் தமிழைப் பற்றி பெருமைப்படுகிறோம் என்றால், அனைவரும் குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் – என்றார்.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பயனடையும் வகையில் தமிழ் மொழியில் மருத்துவப் படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் தமிழக அரசை இதன்போது வலியுறுத்தினார்.
மத்திய பாஜக அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக மாநில அரசு குற்றம் சாட்டியதால், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் மத்திய அரசும் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளன.
புதிய கல்விக் கொள்கையின் (NEP) மும்மொழி சூத்திரம் அண்மைய முக்கிய அம்சமாகும்.
இந்த நடவடிக்கைகள் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை அச்சுறுத்துவதாக தமிழக மாநில அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கிடையில், பாம்பன் பாலம் திறப்பு விழா நிகழ்வை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புறக்கணித்தார்.
ஊட்டியில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய அவர், மக்கள்தொகை வளர்ச்சியை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் வரவிருக்கும் எல்லை நிர்ணய நடவடிக்கையில் தண்டிக்கப்படாது என்றும், நாடாளுமன்ற இடங்களின் சதவீதத்தில் அவற்றின் பங்கு மாறாமல் இருக்கும் என்றும் பிரதமர் தெளிவான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.