மர்மகோவா: 2047-ஆம் ஆண்டில் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ ஆக இருப்பதே நமது நோக்கம், இதற்கு நமது எல்லைகளில் அமைதி அவசியம். அதோடு, இதற்கு தனிநபர் வருமானம் எட்டு மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
கோவாவின் மர்மகோவா துறைமுகத்தில் இன்று 3 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம், இரண்டு துறைமுக மொபைல் கிரேன்களின் வணிக செயல்பாடு மற்றும் நிலக்கரி கையாளுதலுக்கான மூடப்பட்ட குவிமாடம் ஆகியவற்றைத் திறந்து வைத்து அர்ப்பணித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பின்னர் தனது உரையை நிகழ்த்தினார். அப்போது அவர், “2047-ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தேசமாக இருப்பதே நமது நோக்கமாகும். இதற்கு தனிநபர் வருமானத்தில் எட்டு மடங்கு அதிகரிப்பு தேவைப்படுகிறது. இதற்கு நமது எல்லைகளில் அமைதி நிலவுவது அவசியமாகும். போர் போன்ற சூழ்நிலைகள் இருந்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படாது. வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு அமைதி அடிப்படையாகும்.
அமைதி என்பது வலிமையிலிருந்து வருகிறது. பாதுகாப்பில் வலிமை, பொருளாதாரத்தில் வலிமை, வளர்ச்சியில் வலிமை, மற்றும் ஆழ்ந்த அர்ப்பணிப்பு, தளராத அர்ப்பணிப்பு, தேசியவாதத்திற்கான நிபந்தனையற்ற அர்ப்பணிப்பு ஆகியவை வேண்டும். நான் பல சந்தர்ப்பங்களில் இதை வலியுறுத்தியுள்ளேன், இங்கே மீண்டும் வலியுறுத்துகிறேன். தேசிய பாதுகாப்புக்கு, தேசியவாதத்தின் மீதான அசைக்க முடியாத, தளராத அர்ப்பணிப்பு மற்றும் இடைவிடாத தயார்நிலை அவசியம்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் பாகிஸ்தானின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் திறம்பட பதிலடி கொடுத்தது. முரிட்கே மற்றும் பஹாவல்பூரில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா தளங்கள் எவ்வளவு துல்லியமாக குறிவைக்கப்பட்டன என்ற உலகளாவிய செய்தியை இது தெரிவித்தது.
பிரதமர் நரேந்திர மோடி பிஹாரின் மையப்பகுதியிலிருந்து முழு உலகிற்கும் அளித்த செய்தி, பயங்கரவாதம் இனி தண்டிக்கப்படாமல் இருக்காது என்பதே. தண்டனை முன்மாதிரியாக இருந்தது. பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைப்பது என்ற நமது நெறிமுறைகளை மனதில் கொண்டு, தாக்குதல் சர்வதேச எல்லைக்கு அப்பால் ஆழமாக இருந்தது.
யாரும் இதற்கு ஆதாரம் கேட்கவில்லை, ஏனெனில் இலக்கு வைக்கப்பட்ட பயங்கரவாதி முழு உலக சகோதரத்துவத்திற்கும் ஆதாரத்தை வெளிப்படுத்தினார். சவப்பெட்டிகள் அந்த நாட்டின் ராணுவப் படையால், அந்த நாட்டின் அரசியல் பலத்தால், பயங்கரவாதிகளால் சுமந்து செல்லப்பட்டன. ஜனநாயக செயல்பாட்டின் வரலாற்றில் இது நிகரற்ற ஒரு பெரிய சாதனை’’ என்று தெரிவித்தார்.