கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வு, செயற்கை இழை இறக்குமதிக்கு தரக்கட்டுப்பாடு விதிப்பு, மானியங்களை வாரி வழங்கும் பிற மாநிலங்கள் உள்ளிட்ட காரணங்களால் தமிழக ஜவுளித்தொழில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் முதல் நூற்பாலை 1818-ம் ஆண்டு கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. இன்று நாடு முழுவதிலும் 4,210 நூற்பாலைகளில் 5.5 கோடி ஸ்பிண்டல்(நூற்பு இயந்திரங்கள்) திறனுடன் உலகில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. 42 லட்சம் கைத்தறி, 33 லட்சம் விசைதறி, 53 லட்சம் ரோட்டார் திறனை இந்தியா கொண்டுள்ளது.
இந்திய ஜவுளித்தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அதிக பங்களிப்பை கொண்டுள்ளது. நூற்றாண்டு பழமைவாய்ந்தது. இருந்தபோதும் சர்வதேச மற்றும் தேசிய அளவில் போட்டியிட முடியாத நெருக்கடியான நிலை கடந்த மூன்றாண்டுகளுக்கு மேல் நிலவுவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின்(ஆர்.டி.எப்) தலைவர் ஜெயபால் கூறியதாவது: சர்வதேச சந்தையில் போட்டியிட போதுமான தொழில் கொள்கைளை மத்திய, மாநில அரசுகள் மாற்றி அமைக்க காலதாமதம் செய்வதே ஜவுளித்தொழில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதற்கு முக்கிய காரணமாகும். ஐந்து சதவீதம் பங்களிப்பை கொண்ட கார்ப்ரேட் நிறுவனங்களுக்காக கொள்கைகள் மாற்றியமைக்கப்படுகின்றன.
சர்வதேச அளவில் மொத்தம் 410.84 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிரிப்படுகிறது. இதில் 153 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு, சர்வதேச அளவில் 38 சதவீதம் கொண்டு இந்தியா உலகளவில் முதல் இடத்தில் உள்ளது. விவசாயிகளுக்கு அடிப்படை விலை கிடைக்க மத்திய அரசு குறைந்தபட்ச உதவி தொகை(எம்எஸ்பி) விலை நிர்ணயம் செய்த பலன் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. மாறாக இடைதரகர்களுக்கு கிடைத்ததால் விலை உயர்ந்து சர்வதேச விலையை விட இந்திய நூற்பாலைகள் 20 சதவீதத்திற்கு மேல் கூடுதல் விலை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. அதே போல் செயற்கை இழை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு விதிமுறையால்(கியூசிஓ-பிஐஎஸ்) 18 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு போட்டி மாநிலங்களுக்கு இணையாக தொழில் கொள்கை வகுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் தலைவர் டாக்டர். சுந்தரராமன் கூறியதாவது: தமிழ்நாட்டு ஜவுளித்தொழில் கரோனா நோய்தொற்று பரவலுக்கு பின் 2020- 2022 நிலையான வளர்ச்சியை பதிவு செய்தது. அதற்கு பின் ஒரு பகுதி கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. திருப்பூர், கரூர் மாவட்டங்கள் சிறிய அளவிலான பணி ஆணைகள் பெற்று ஐரோப்பிய நாடுகளுக்கு சிறந்த முறையில் ஏற்றுமதி செய்து வருகின்றன. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
மகாராஷ்ட்ரா, குஜராத் போன்ற மாநிலங்கள் மின்கட்டணம் குறைவு, மானியம் வழங்குதல் போன்ற பல திட்டங்களை செயல்படுத்துகின்றன. இதனால் தமிழக ஜவுளித்தொழில்துறையினர் இத்தகைய மாநிலங்களுடன் போட்டியிட முடியாத சவாலான நிலை ஏற்பட்டுள்ளது. தவிர சர்வதேச விலையை விட இந்திய பருத்தி விலை தொடர்ந்து அதிகமாக உள்ளது.
செயற்கை இழை ஜவுளித்தொழில் சிறந்த வளர்ச்சிக்கு வாய்ப்பு உள்ள போதும், இந்தியாவில் செயற்கை இழை இறக்குமதி செய்ய அமல்படுத்தப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு விதிமுறைகளால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சாயமேற்றுதல் பணி விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் குஜராத் போன்ற மாநிலங்களில் இத்தகைய விதிமுறைகள் அதிகம் இல்லை. எனவே செலவு குறைவு என்ற காரணத்தால் தமிழ்நாட்டில் இருந்து பல கோடி மீட்டர் துணி குஜராத் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டியுள்ளது. இதனால் போக்குவரத்து செலவு அதிகரித்து உற்பத்தி செலவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தய பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(டெக்ஸ்புரோசில்) துணை தலைவர் ரவிசாம் கூறியதாவது: பருத்திக்கு விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத இறக்குமதி வரியை ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் மாத இறுதி வரையாவது நீக்க வேண்டும். பருத்தி விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. செயற்கை இழை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு விதிமுறை ஏற்புடையதல்ல. அவற்றை நீக்கினால் செயற்கைஇழை ஜவுளித்தொழில் மிக சிறப்பான வளர்ச்சி பெறும். தவிர விரைவில் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா நாடுகளுக்குடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் கையயழுத்திடும் நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும். மேலும் அமெரிக்க அரசுடன் பேசி விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.