சென்னை: கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களின் உடல்நலனை பேணும் வகையில், அவர்களுக்கு முழு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அடையாள அட்டை வழங்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்று, தமிழ்நாடு விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சி மற்றும் தமிழகக் கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று (மார்ச் 18) நடைபெற்றது. பொதுச் செயலாளர்கள் எஸ்.ஜெகதீசன், ஜெகமுருகன், வி.சுப்பராயலு, மாநிலப் பொருளாளர் ஆர்.சேகர் ஆகியோர் முன்னிலையிலும், தலைவர் பொன்குமார் தலைமையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வாரியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுவசதி திட்டம் குறித்தும், மானியம் மற்றும் குறைந்த வட்டியில் தொழில் தொடங்க கலைஞர் கைவினைக் கடன் திட்டம் குறித்தும், மாநில பொதுக்குழு நடத்துதல் குறித்தும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
பின்னர், இக்கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய முயற்சிக்கும் மத்திய அரசின் செயல் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கான ஆபத்து உள்ளது. எனவே, இப்போதுள்ள தொகுதிகளின் அடிப்படையிலேயே விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை செய்ய வேண்டும். அதுவரை இப்போது உள்ள தொகுதிகள் அப்படியே நீடிப்பதற்கான சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.
கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களின் உடல்நலனை பேணும் வகையில், அவர்களுக்கு முழு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அடையாள அட்டை வழங்கப்படும் என்பது வரவேற்புக்குரிய திட்டமாகும். கட்டுமான தொழிலாளர்களுடைய பிள்ளைகள் தொழில்கல்வி பெரும் வகையில், தமிழகத்தில் 7 இடங்களில் தங்கும் விடுதியுடன் கூடிய தொழிற்கல்வி பயிலகங்கள் (ஐடிஐ) தொடங்குவதற்கு நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனை வரவேற்பதோடு, கட்டுமானத் தொழிலாளர்களுடைய பிள்ளைகளுக்கு கல்வி மற்றும் விடுதி கட்டணமின்றி இலவசமாக விடுதியில் தங்கி, இலவசமாக கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும், தமிழர்களை அவமதித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகிட வலியுறுத்தியும், இந்தி மொழி திணிப்புக்கு கண்டனம் தெரிவித்தல் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.