தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகளை வரவேற்றுள்ள விவசாயிகள், எதிர்பார்த்த அறிவிப்புகள் வெளியாகவில்லை என்று ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன்: தமிழகத்தில் 7 இடங்களில் விதை சுத்திகரிப்பு நிலையமும், ரூ.250 கோடியில் விதை உற்பத்தி நிலையமும் அமைக்கப்படும். 5 ஆயிரம் புதிய வேளாண்மை இயந்திரங்கள் வாங்கப்படும். 3,600 வாடகை இயந்திர மையங்கள் அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. ஆனால், 4.39 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் அறிவிக்கப்பட்டு இருக்கும்போது, இதற்கான நிதி ஆதாரம் எப்படி வரும் என்பது தெரிவிக்கப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எந்த அறிவிப்பும் நிறைவேற்றப்படவில்லை. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. விளை பொருட்ளுக்கு உரிய விலை இல்லாமல் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகின்றனர். மொத்தத்தில் நிதி ஆதாரமில்லாமல் வாசிக்கப்பட்ட தமிழக பட்ஜெட், வெறும் காகிதப் பட்ஜெட் போல உள்ளது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு: வேளாண் பட்ஜெட்டில் தூர் வாரவும், நிலத்தை சீர்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. நவீனத் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வது பாராட்டத்தக்கது. பயிர்க் காப்பீட்டை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அதுகுறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமாகிவிட்டது.
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வீ.இளங்கீரன்: வேளாண் பட்ஜெட் விவசாயி
களுக்குப் பயன் அளிக்கும் வகையில் உள்ளது. நெல்லுக்கான சிறப்புத் திட்டம், நெல் உற்பத்தியை அதிகரிக்க உதவும். ரூ. 10 கோடியில் முந்திரி வாரியம், 50 முக்கிய உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கீடு, டெல்டா மாவட்டங்களில் 22 நவீன நெல் சேமிப்பு மையங்கள், பிற மாவட்டங்களில் 6 நெல் சேமிப்பு மையங்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் காவிரி தனபாலன்: மதிப்புக் கூட்டுப் பொருட்களுக்கு மானியம், கடனுதவிகள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல, ஆயிரம் இடங்களில் உழவர் சேவை மையங்கள், கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம், விவசாய கடன் வழங்க ரூ.17 ஆயிரம் கோடி நிதி, முந்திரி வாரியம் அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. வேளாண்மை துறையை ஒரே துறையாக ஒருங்கிணைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை. தூர் வாரும் பணிக்கு ரூ.120 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. அணைகளை தூர்வாருவது குறித்த அறிவிப்பும் இல்லை. ஆறுகள், வாய்க்கால்களில் உள்ள மதகுகள், ஷட்டர்கள், பக்கவாட்டு சுவர்களை சீரமைப்பது குறித்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.
காவிரி-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் மிசா.மாரிமுத்து: வேளாண் பட்ஜெட் தொடர்பாக விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியது கண்துடைப்பு நாடகமாக உள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், விளைபொருட்களுக்கு கட்டுபடியான விலை, மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம், நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்புக்கு டன் ரூ.4,000 போன்றவை நடைமுறைப்படுத்தவில்லை. காவிரி-குண்டாறு திட்டத்தில் திமுக அரசுக்கு அக்கறை இல்லாததை வேளாண் பட்ஜெட் காட்டுகிறது. இதை 7 மாவட்ட விவசாயிகள் சார்பில் கண்டிக்கிறோம்.
Discover more from SARINIGAR
Subscribe to get the latest posts sent to your email.