பசுபிக் பெருங்கடலில் 95 நாட்களாக காணாமல் போன பெருவியன் மீனவர் மீட்பு!

பசுபிக் பெருங்கடலில் 95 நாட்கள் காணாமல் போய், கரப்பான் பூச்சிகள், பறவைகள் மற்றும் கடல் ஆமைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்த பெருவியன் மீனவர் ஒருவர், தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார்.

கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி, தெற்கு பெருவியன் கடற்கரையில் உள்ள மார்கோனா என்ற நகரத்திலிருந்து மீன்பிடிப் பயணத்திற்காக மாக்ஸிமோ நாபா காஸ்ட்ரோ என்ற 61 வயதுடைய நபர் புறப்பட்டார்.

இரண்டு வார திட்டமிடப்பட்ட பயணத்திற்கான உணவை அவர் கொண்டு சென்றார்.

ஆனால், பத்து நாட்களுக்குப் பின்னர் புயல் காற்று அவரது படகை திசைதிருப்பியது.

இதனால், அவர் பசுபிக் பெருங்கடலில் தத்தளித்ததுடன், காணாமல் போனார்.

இதையடுத்து, அவரது குடும்பத்தினர் தேடுதலைத் தொடங்கினர், ஆனால் பெருவின் கடல்சார் ரோந்துப் படையினரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை ஈக்வடார் ரோந்துக் கப்பலான டான் எஃப் அவரை கடற்கரையிலிருந்து 1,094 கிமீ (680 மைல்) தொலைவில், நீரிழப்பு மற்றும் ஆபத்தான நிலையில் கண்டுபிடித்து மீட்டது.

மாக்சிமோ தனது படகில் மழைநீரை நிரப்பி அருந்தியும், கிடைத்ததைச் சாப்பிட்டு உயிர் பிழைத்ததாகவும் கூறினார்.

வெள்ளிக்கிழமை, ஈக்வடார் எல்லைக்கு அருகிலுள்ள பைட்டாவில் தனது சகோதரருடன் ஒரு உணர்ச்சிபூர்வமான சந்திப்பில், கடல் ஆமைகளை நாடுவதற்கு முன்பு கரப்பான் பூச்சிகள் மற்றும் பறவைகளை எப்படி சாப்பிட்டேன் என்பதை விவரித்தார்.

அவரது கடைசி 15 நாட்கள் உணவு இல்லாமல் கழிந்ததாகவும் படகில் தத்தளித்த போது, தனது இரண்டு மாத பேத்தி உட்பட தனது குடும்பத்தினரை நினைத்தது வருந்தியதாகவும் கூறினார்.

மீட்பின் பின்னர் மாக்சிமோ, பெருவியன் தலைநகர் லிமாவிற்கு விமானத்தில் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைகளுக்காக பைட்டாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி


Discover more from SARINIGAR

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

error: Content is protected !!