2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்றைய (20) தினம் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
சண்டிகரில் அமைந்துள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 37 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும் மோதவுள்ளன.
இந்த ஆட்டம் இன்று பிற்பகல் 03.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளும் கடந்த 48 மணி நேரத்திற்குள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மழையால் பாதிக்கப்பட்டு ஓவர்கள் குறைக்கப்பட்ட போட்டியில் ஒன்றுடன் ஒன்று மோதின.
ஷ்ரேயாஸ் அயர் தலைமையிலான பஞ்சாப் அணி 14 ஓவர்கள் கொண்ட போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சீசனில் பஞ்சாப் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தற்போது இரண்டு அற்புதமான தொடர் வெற்றிகளுக்குப் பின்னர் நம்பிக்கையுடன் உள்ளது.
ஏழு ஆட்டங்களில் ஐந்து வெற்றிகளுடன், அவர்கள் இப்போது 10 புள்ளிகள் மற்றும் 0.308 என்ற நேர்மறை ஓட்ட விகிதத்துடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
அநேரம், தான் சந்தித்த கடைசிப் போட்டியில் தோல்வியைத் தழுவிய ரஜர் பட்டிதர் தலைமையிலான பெங்களூரு அணியானது பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
தொடரில் அவர்கள் சந்தித்த 07 போட்டிகளில் நான்கு வெற்றிகளை பதிவு செய்துள்ளனர்.
அதேநேரம் மூன்று தோல்விகளை தழுவியுள்ளனர்.
இதேவேளை, நடப்பு ஐ.பி.எல். தொடரின் 38 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (CSK) மோதவுள்ளன.
இந்த ஆட்டமானது இன்றிரவு 07.30 மணிக்கு மும்பை, வான்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
கடந்த மார்ச் 23 அன்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியதிலிருந்து நிறைய மாற்றங்கள் இந்தப் போட்டியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதல் போட்டியில் CSKஅணி தங்கள் சொந்த மைதானத்தில் தங்கள் பரம எதிரிகளை வீழ்த்தி அபார வெற்றியுடன் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கியது.
ஆனால், அதன் பின்னர் அவர்கள் அடுத்த ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று தடுமாறினர்.
மறுபுறம், முதல் ஐந்து ஆட்டங்களில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, மிகவும் நிதானமாக பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் இரண்டு தொடர்ச்சியான வெற்றிகளுடன் முதல் நான்கு இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பிலும் உள்ளனர்.
மும்பையில் இன்று நடைபெறும் மோதல் இரு அணிகளுக்கும் சீசனை வரையறுக்கும் என்பதை நிரூபிக்கக்கூடும்.