சேப்பாக்கத்தில் நேற்றிரவு (23) நடந்த 2025 ஐ.பி.எல். தொடரின் மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது.
இந்த தோல்வியானது கடந்த 13 ஆண்டுகளாக மும்பை அணி இந்தியன் பிரீமியர் லீக் தொடக்கப் போட்டியில் சந்திக்கும் மற்றுமோர் போட்டியாக அமைந்தது.
மும்பை அணி இறுதியாக 2012 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றது,
அதன் பின்னர் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது களமிறங்கியது.
சென்னையின் நூர் அகமட் (18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்) மற்றும் கலீல் அகமட் (29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள்) இணைந்து மும்பை அணியின் துடுப்பாட்ட வரிசையை தகர்த்தனர்.
இதனால், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளுக்கு 155 ஓட்டங்களுக்கு மும்பை அணியை அவர்கள் கட்டுப்படுத்தினர்.
சேஸிங்கில், ராச்சின் ரவீந்திரா 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களை எடுத்து வெற்றிக்கு உதவினார்.
இது தவிர சென்னை அணியின் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் 26 பந்துகளில் 53 ஓட்டங்களை எடுத்து முக்கிய பங்களிப்பை வழங்கினார்.
மும்பை சார்பில் 24 வயதான அறிமுக வீரர் விக்னேஷ் புதூர் 32 பந்துகளுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தி, (சில முக்கியமான விக்கெட்டுகள்) மும்பை அணிக்கு பெரிதும் பங்காற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக நூர் அகமட் தெரிவானார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த போட்டியானது மார்ச் 28 ஆம் திகதி சென்னையில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, ஹைதராபாத்தில் நேற்றைய தினம் நடந்த மற்றுமோர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 44 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ஓட்டங்களை குவித்தது.
இஷான் கிஷான் 47 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கலாக 106 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார்.
அவர் தவிர அதிகபடியாக டிராவிஸ் ஹெட் 31 பந்துகளில் 67 ஓட்டங்களை எடுத்தார்.
பின்னர் மிகப்பெரிய இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 242 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
துருவ் ஜூரெல் 35 பந்துகளில் 70 ஓட்டங்களையும், சஞ்சு சாம்சன் 66 ஓட்டங்களையும் மற்றும் சிம்ரன் ஹேட்மேயர் 42 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இஷான் கிஷான் தெரிவானார்.