2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (09) நடைபெற்ற 23 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியை 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி அபார வெற்றி பெற்றது.
அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியானது முதலில் பந்து வீச்சை மேற்கொள்ளத் தீர்மானித்தது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்களை குவித்தது.
குஜராத் அணி சார்பில் அதிகபடியாக ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சாய் சுதர்சன் 53 பந்துகளில் 82 ஓட்டங்களை எடுத்தார்.
அது தவிர, ஜோஸ் பட்லர் மற்றும் ஷாருக் கான் ஆகியோரும் தலா 36 ஓட்டங்களை பெற்று அணியின் அபார ஓட்ட குவிப்புக்கு உதவினர்.
218 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணியானது 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
ராஜஸ்தான் அணி சார்பில் ஷிம்ரான் ஹெட்மேயர் 52 ஓட்டங்களையும், சஞ்சு சாம்சன் 41 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் குஜராத் அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா அதிகபடியாக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக சாய் சுதர்சன் தெரிவானமையும் குறிப்பிடத்தக்கது.