பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் உள்ள சித்திரவதைக்கூடங்கள், சட்டரீதியற்ற தடுப்பு நிலையங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியவற்றினை விசாரணை செய்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை 2001ஆம் ஆண்டே இந்த சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது பாராளுமன்றத்தில் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் 10பேர் இருந்தார்கள். பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால மெண்டிஸ் இந்த அறிக்கையை சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றியபோது இவர்கள் யாரும் அந்த அறிக்கை தொடர்பில் கதைக்கவில்லை.
அதேபோன்று பட்டலந்த சம்பவம் இடம்பெற்று, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கொலை செய்யப்பட்டு 35 வருடங்கள் கடந்த நிலையில் அமைதியாக இருந்த இவர்கள், அல்ஜசீரா இதுதொடர்பில் வெளிப்படுத்திய பின்னர் நித்திரையில் இருந்து எழுந்ததுபோன்று, பட்டலந்த விசாரணை அறிக்கையை சபைக்கு சமர்ப்பித்தார்கள்.
அல் ஜசீரா இதனை நினைவுபடுத்தாவிட்டால் இவர்களுக்கு தற்போது இது ஞாபகத்துக்துக்கு வருவதில்லை. தேர்தல் பிரசாரத்துக்கே இதனை எடுத்துக்கொண்டுள்ளனர்.
1988, 1989 காலப்பகுதியில் இவர்கள் ஆயுதம் ஏந்தும் குழுவாக தலைதூக்கியது, இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கு எதிராக அமைக்கப்பட்ட குழுவாகும். மாகாணசபை வேண்டாம் என்றார்கள், அது நாட்டை பிளவுபடுத்தும் என்றார்கள்.மாகாணசபையை கோரியவர்களை கொலை செய்தார்கள். மாகாணசபை தேர்தலில் வாக்களித்தவர்களின் விரல்களை வெட்டினார்கள்.
தேசிய பிரச்சினைக்கு தீரவுகாணவே அன்று மாகாணசபையை கொண்டுவந்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இவர்கள், 1994க்கு பின்னர் மாகாணசபைக்கு வந்து, தீர்வையற்ற வாகன அனுமதி பத்திரத்தையும் பெற்றுக்கொண்டார்கள். மேல்மாகாண சபையில் என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் இந்த வாகன அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொண்டார்கள்.
இவர்களின் தலைவர் ராேஹன விஜேவீர கொலை செய்யப்பட்டு 36 வருடங்களாகியுள்ள நிலையில் அதுதொடர்பில் விசாரணை செய்ய கொண்டுவந்த ஒரு பிரேரணையை முடிந்தால் தெரிவிக்கட்டும். இவர்கள் அரசாங்கம் அமைப்பது இது முதல் தடவையல்ல. சந்திரிகாவுடன் இணைந்து காபந்து அரசாங்கம் ஒன்றை அமைத்தார்கள். அநுரகுமார திசாநாயக்க அந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார்.
அப்போது இந்த விசாரணை அறிக்கை நினைவுக்கு வரவில்லை. அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ்வுடன் இணைந்து செயற்பட்டு அவரை பிரதமராக கொண்டுந்தார்கள். அப்போாதும் இவர்களுக்கு இந்த விடயம் நினைவுக்கு வரவில்லை. அதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க அமைத்த நல்லாட்சி அரசாங்கத்தில் நிறைவேற்று குழுவில் பிரதான உறுப்பினராக செயற்பட்டு வந்தார்.
பொன்சேகாவை வெற்றிபெறச் செய்ய அநுரவும் ரணிலும் ஒரு மேடையில் இருந்தார்கள். தற்போது ஏன் ரணிலுக்கு எதிராக செயற்படுகின்றனர். தேர்தலை இலக்காகக்கொண்டு இந்த விவாதத்தை கொண்டுவந்து தற்போது அரசாங்கம் அசிங்கப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியிடம் ஓய்வுபெற்ற இராணுவ குழுவொன்று இருக்கிறது. அந்த குழுவில் 1988,1989 காலப்பகுதியில் இராணுவ முகாம்களுக்கு பொறுப்பான ஒருவராவது இருக்கிறார்களா? ஆனால் தற்போது அரசாங்கத்தின் பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருப்பவர் மக்கள் விடுதலை முன்னணியி்ன் கலவரத்தை அடக்குவதற்கு தலைமைத்துவம் தாங்கி இருக்கிறார்.
அவருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? அதேபோன்று மேஜர் ஜனரல் தோரதெனிய என்பவரே ரோஹண விஜேவீரவை கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தோரதெனிய மாலைதீவில் இருக்கும்போது சுனில் ஹந்துன்னெத்தி ஒரு விழாவுக்கு சென்று அவருடன் ஒன்றாக இருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
அதேபோன்று சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஆலோசகராக இருக்கும் ரணவீரவே அன்று வெலிபன்ன முகாமுக்கு தலைமைத்துவம் வகித்தார். தாஜுதீன் கொலையில். தேவையான ஆதாரங்களை மறைத்த குற்றச்சாட்டு அவருக்கு தெரிவிக்கப்படுகிறது. அவரை வைத்துக்கொண்டுதான் அரசாங்கம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் தேடிவருகிறது. ரோஹண விஜேவீரவின் நெருக்கமாக இருந்து அவருக்கு உதவி வந்த ஒருவர்தான் கருணா அக்கா. ரோஹண விஜேவீரவின் பிள்ளைகளை வளர்த்து வந்தது கருணா அக்காவாகும்.
ஆனால் கருணா அக்காவின் அண்ணன் சைமனை கொலை செய்ய வழிநடத்தியது, ரணவீர என்ற உங்களது ஆலோசகர். அவரை அரசாங்கம் கைதுசெய்யுமா என்று கேட்கிறேன்.இவை அனைத்தும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு தெரியாது. அதேபோன்று நீதி அமைச்சரின் தந்தை யசபாலித்த நாணயக்கார, பொதுஜன கட்சி மக்கள் மாகாண சபை உறுப்பினர், அவரை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது ஜேஆர். வழங்கிய ஆயுதங்களை வைத்துக்கொண்டே பாதுகாத்துக்கொண்டார்.
அவர் எப்படி மறைந்திருந்தார் என்பதை நீதி அமைச்சரிடம் கேட்டுப்பாருங்கள். மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களை கொலை செய்ய ஒத்துழைப்பு வழங்கியமைக்கு நீதி அமைச்சரின் தந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்களா? அதனால் கடந்த கால வரலாற்றை கிளறும்போது பலரது விடயங்கள் வெளியில் வரும்.
இவர்கள் அனைவரும் குற்றம் செய்தவர்கள். 88,89 காலப்குதியில் குற்றம் செய்த பலர் தற்போது அரசாங்கத்தில் இருக்கின்றனர். அவர்களை அரசாங்கம் பாதுகாக்குமா? அவர்களுக்கு வழங்கப்போகும் தண்டனை என்ன? அன்று குற்றம் செய்தவர்களுடனே இணைந்தே இவர்களுக்கு அரசாங்கம் அமைக்க முடியுமாகி இருக்கிறது. அந்த காலப்பகுதியில் பட்டலந்த மாத்திரமல்ல, 200க்கும் மேற்பட்ட முகாம்கள் இருந்தன.
அனைத்து முகாமகளில் இடம்பெற்ற சித்திரவதைகளையும் ஒன்றிணைத்துக்கொண்டே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்துவகையான குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை இணைத்துக்கொண்டே இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் விடயங்களை ஒவ்வொன்றாக தேட ஆரம்பித்தால் அதிகமானவர்களுக்கு வெளியேற வேண்டி ஏற்படும்.
அதேபோன்று இந்திய எதிர்ப்பு போராட்டம் மேற்கொண்டு அதில் பலர் மரணித்தார்கள். ஆனால் இந்திய பிரதமரை வரவேற்று நாடுபூராகவும் பதாதைகள் தொங்கவிடப்பட்டிருந்தன, அந்த பதாதைகளில் எழுதப்பட்டிருந்த ஆங்கில எழுத்து பிழையாக இருந்தது. அதனை மறைப்பதற்கு அரசாங்கம் அதில் ஸ்டிகர் ஒன்றை ஒட்டினார்கள்.
ஆனால் மக்கள் விடுதலை முன்னணி வரலாற்றில் செய்த தவறுகளை ஒருபோதும் மறைக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அந்த வரலாறு தற்போது எழுதப்பட்டுள்ளது. அதனை ஸ்டிகர் ஒட்டி மறைக்க முடியாது. உங்களது பிழையான அரசியல் காரணமாக அதிகளவிலான இளைஞர்களை தூக்கு மேடைக்கு எடுத்துச்செல்லப்பட்டார்கள். மறுபுறம் உங்களுக்கு எதிரானவர்கள் பலரை நீங்களே கொலை செய்தீர்கள். இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களைக்கூட வெளிப்படுத்த அரசாங்கம் அச்சப்படுகிறது என்றார்.
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)