ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தலிபான்கள் தடை! | Taliban bans chess in Afghanistan

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து, பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அந்த அறிவிப்புக்கு மாறாகவே பல்வேறு சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். மே-11 ஆம் தேதி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மத கலாசாரத்திற்கு எதிராக இந்த விளையாட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் கொடுக்கும் வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் கூறியிருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து விளையாட்டு நிகழ்வுகளையும் ஒழுங்குபடுத்தும் தலிபானின் விளையாட்டு இயக்குநரகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஷரியா சட்டத்தின்படி செஸ் விளையாட்டு சூதாட்டமாகக் கருதப்படுவாதாக கூறப்படுகிறது.

வணிகர் அசிசுல்லா குல்சாடா கடந்த சில ஆண்டுகளாக சதுரங்க விளையாட்டை வணிகமாக நடத்தி வருகிறார். இது குறித்து அவர் கூறும்போது, “இந்த உத்தரவை மதிக்கிறேன். அதே வேளையில், இந்த தடை உத்தரவால் எங்களது வணிகம் பாதிக்கும்” என்று கூறியிருக்கிறார். இந்த முடிவு செஸ் விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!