சென்னை: இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் நிலையில், தமிழகம் – ஜெர்மனி இடையிலான வர்த்தகம் கணிசமாக அதிகரிக்கும் என்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் ஜெர்மனியின் தூதரக அதிகாரி கேத்ரின் மிசெரா லாங் தெரிவித்தார்.
தென்னிந்திய வர்த்தக தொழில் சபை, தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனம் (கைடன்ஸ் தமிழ்நாடு), ஜெர்மனியின் பிவிஎம்டபிள்யூ சங்கம் சார்பில் இந்தியா – ஜெர்மனி இடையிலான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை செயலர் அதுல் ஆனந்த் தலைமை தாங்கி, இந்தோ – ஜெர்மன் எம்எஸ்எம்இ உறவுகள் குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டார்.
பின்னர், அவர் பேசியதாவது: தமிழக பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் நோக்கில் பல்வேறு தொழில் திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது. அதன்படி, எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கும் ஒற்றை சாளர அனுமதி (சிங்கிள் விண்டோ கிளியரன்ஸ்) வழங்கப்பட்டு வருகிறது. இங்கு தொழில் மேற்கொள்ளும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இது எளிதாக இருக்கிறது.
நாட்டிலேயே மிகவும் தொழில்மயம் ஆக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. தேசிய அளவில் 16 சதவீத தொழிற்சாலைகள் தமிழகத்தில்தான் உள்ளன. இங்கு 33 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உள்ளன. நாட்டிலேயே அரிசி ஏற்றுமதியில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
ஜெர்மனி தூதரக அதிகாரி கேத்ரின் மிசெரா லாங் பேசும்போது, ‘‘தமிழகத்தில் 200 நிறுவனங்கள் உட்பட நாடு முழுவதும் ஜெர்மனியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு இந்தியா நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் நிலையில், தமிழகம் – ஜெர்மனி இடையிலான வர்த்தகம் கணிசமாக அதிகரிக்கும்” என்றார்.
இந்த நிகழ்வில் தென்னிந்திய வர்த்தக தொழில் சபையின் துணை தலைவர் வி.என்.சிவசங்கர், உறுப்பினர் ராமன் ரகு, பி.எம்.டபிள்யூ (இந்தியா) நிர்வாக இயக்குநர் தாமஸ் டோஸ், பிவிஎம்டபிள்யூ சங்கத்தின் (இந்தியா) இயக்குநர் டேனியல் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.