இன்றைய தினம் இரு போட்டிகள்! – Athavan News

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

அதன்படி, இன்று பிற்பகல் 03.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நடப்பு ஐ.பி.எல். சீசனின் 45 ஆவது போட்டியில் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது, ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

18 ஆவது ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளும் ஒரே மாதிரியான சாதனைகளைக் கொண்டுள்ளன.

இரண்டு அணிகளும் தாம் சந்தித்த ஒன்பது போட்டிகளிலும் தலா ஐந்து வெற்றிகள் மற்றும் நான்கு தோல்விகளை பெற்றுள்ளன.

ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிக்குப் பின்னர் மும்னை இந்தியன்ஸ் அணி உத்வேகத்தில் உள்ளனர்.

பிளேஆஃப் வாய்ப்பு நெருங்கி வருவதால், ஒவ்வொரு போட்டியும் இப்போது நாக் அவுட் ஆட்டம் போல் அமைவதனால் இந்த போட்டியும் முக்கியத்துவம் பெறுகிறது.

இதற்கிடையில், லக்னோ அணியானது ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் ஏற்பட்ட குறுகிய தோல்வி, அவர்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தியுள்ளது.

மும்பை அணிக்கு எதிரான மோதல் வெறும் புள்ளிகளைப் பற்றியது மட்டுமல்ல, அழுத்தத்தின் கீழ் தங்கள் திறமையை நிரூபிப்பதாகவும் இருக்கும்.

இரு அணிகளும் துடிப்பான துடுப்பாட்ட வரிசையையும், வலுவான பந்துவீச்சுக்களையும் கொண்டிருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

அதேநேரம், இன்று இரவு 07.30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள போட்டியில் ரஜத் பட்டிதர் தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

பிளேஆஃப் சுற்றுக்கான போட்டியில் இரு அணிகளும் முட்டி மோதுவதனால், இந்தப் போட்டியின் முடிவு புள்ளிகள் அட்டவணையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி இந்த சீசனில் தான் எதிர்கொண்ட எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகள் மற்றும் இரண்டு தோல்விகளுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

டெல்லி அணி, நடப்பு சீசனில் மிகவும் நிலையான அணிகளில் ஒன்றாகும்.

ஏனெனில், அவர்களின் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருவரும் கூட்டு செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.

மறுபுறம், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணிகளுக்கு எதிரான தொடர்ச்சியான வெற்றிகளின் பின்னணியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இன்று களமிறங்குகிறது.

ரஜத் படிதர் தலைமையிலான அணி ஒன்பது போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

RCB அணியின் துடுப்பாட்டம் மீண்டும் விராட் கோலி தலைமையில் நடைபெறுகிறது.

ஏனைய வீரர்கள் அவருக்கு வலுச் சேர்ந்து ஆடுகின்றனர்.

பந்துவீச்சு தாக்குதலை ஜோஷ் ஹேசில்வுட் வழிநடத்துகிறார்.

அவர் ஒன்பது இன்னிங்ஸ்களில் 16 விக்கெட்டுகளுடன் இந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

முந்தைய சீசன்களைப் போலல்லாமல், RCB அணி முக்கியமான கட்டங்களில் தங்கள் விதிவிலக்கான பந்துவீச்சால் மீண்டும் போட்டிகளில் நுழைந்துள்ளது.

எனவே, முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பதற்கு இந்த ஆட்டத்தில் அவர்களுக்கு வெற்றி அவசியமாகிறது.

ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 32 போட்டிகளில் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளன.

அதில் RCB அணியானது 19 வெற்றிகளையும், DC அணியானது 12 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

ஒரு போட்டி எதுவித முடிவின்றி கைவிடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!