ஊருக்கும் வெட்கமில்லை! உலகுக்கும் வெட்கமில்லை! ரணிலுக்கும் வெட்கமில்லை!

 

சிங்களபௌத்த அரசுத் தலைவர்கள்,அவர்கள் யுத்த வெற்றிவாதிகளாக இருந்தாலும் சரி,அல்லது லிபரல் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி,அல்லது சமூக நீதி முகமூடி அல்லது மாற்றத்தின் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி,யாருமே தமிழ் மக்களுக்கோ அல்லது இறந்த காலத்துக்கோ பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதைத்தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஐநாவின் 58ஆவது கூட்டத் தொடர் உணர்த்துகின்றது. ஐநா கூட்டத்தொடரில்,கடந்த மாதம் 25ஆம் திகதி,தேசிய மக்கள் சக்தியின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆற்றிய உரையில் ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான பன்னாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை நிராகரித்திருந்தார்.”சிறீலங்கா பொறுப்புக் கூறலுக்கான நிகழ்ச்சித்திட்டம்”(Sri Lanka accountability project)எனப்படும் அப்பொறிமுறையானது கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து செயற்பட்டு வருகின்றது.போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பலவீனமான ஆனால் பன்னாட்டுப் பொறிமுறை அதுவாகும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பன்னாட்டுப் பொறிமுறையை நிராகரித்து ஒன்பது நாட்களின் பின், ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய் மூல அறிக்கை வெளிவந்து நான்கு நாட்களின் பின்,ரணில் விக்கிரமசிங்கவின் அல்ஜசீரா நிகழ்ச்சி வெளிவந்திருக்கிறது.அந்த நிகழ்ச்சியும் சிங்களத் தலைவர்கள் யாராயிருந்தாலும் குற்றங்களுக்குப் பொறுப்புக்குகூற மாட்டார்கள் என்பதைத்தான் உலகத்துக்கு எடுத்துக் கூறியுள்ளது.

ஜெனிவா கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் மேற்படி காணொளி வெளிவந்திருக்கிறது.ஏற்கனவே ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய காணொளி உள்ளடங்களாக ‘சனல் நாலு’ காணொளிகள் இவ்வாறு ஐநா கூட்டத் தொடர்கள் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலேயே வெளிவந்தனை என்பதையும் இங்கு தொகுத்துக் கவனிக்கவேண்டும்.தேசிய மக்கள்சக்தி அரசாங்கத்துக்கு மறைமுகமாக அழுத்தங்களைப் பிரயோகிக்கும் உள்நோக்கங்கள் இதில் உண்டா என்றும் பார்க்க வேண்டும்.கடந்த 15ஆண்டுகளிலும் இவ்வாறு பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களின் விளைவாக தமிழ்மக்களுக்கு என்ன கிடைத்தது என்பதையும் தொகுத்துப் பார்க்கவேண்டும்.

இனி அந்தக் காணொளிக்குள் நுழைவோம். முதலில்,அந்த நிகழ்ச்சி எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும்.அது ஒரு நேர்காணல் என்பதைவிடவும் குறுக்கு விசாரணையாகவே பெருமளவுக்கு அமைந்திருந்தது.மஹ்தி ஹசன் நன்கு வீட்டுவேலை செய்துகொண்டு வந்திருந்தார்.விரல் நுனியில் தகவல்களை வைத்திருந்தார்.வீட்டுவேலை செய்யாமல் கேள்வி கேட்கப்போகும் ஊடகவியலாளர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.அது புலம் பெயர்ந்த தமிழர்கள் பலமாக உள்ள ஒரு களம்.புலம்பெயர்ந்த தமிழர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிந்திருந்தும் ரணில் அநாயாசமாகப் போய் மாட்டிக் கொண்டார்.இனி எந்த ஒரு சிங்களத் தலைவரும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு போவதற்கு முன் ஒன்றுக்கு பலதடவை யோசித்து முடிவெடுக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்ச்சி அது.ஒரு விதத்தில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் பலத்தையும் அது காட்டியது.

ரணிலைச் சுற்றிவளைக்கும் கேள்விகள்.அவர் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுதே மஹ்தி ஹசன் குறுக்கே பாய்ந்து கேள்விகளைக் கேட்கிறார்.சில இடங்களில் ரணில் கூறும் பதில்களைப் பொருட்படுத்தாமலேயே கடந்து போகிறார். சில பதில்களுக்கு மறுத்தான்களை அனாயசமாகத் தூக்கிப்போட்டு விட்டுப் போகிறார்.அந்த நிகழ்ச்சி முழுவதிலும் மஹ்தி ஹசன் ஒரு குறுக்கு விசாரணை செய்யும் அதிகாரியின் தோரணையிலேயே பெருமளவுக்கு நடந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த கவர்ச்சியும் அதுதான். தமிழ்த் தரப்பு அதை கொண்டாடுவதற்கு பிரதான காரணங்களில் அதுவும் ஒன்று.

ஆனால் மஹ்தி ஹசன் எவ்வளவுதான் சுற்றிவளைத்தாலும் ரணில் பெருமளவுக்கு உணர்ச்சிவசப்படவில்லை என்பதனை பலரும் கவனிக்கத் தவறுகிறார்கள்.ரணில் வெகு ‘கூலாக’ பதில் கூறுகிறார்.அவருடைய சிறிய தொந்தியில் வழுகும் கழுத்துப்பட்டியை இடைக்கிடை சரிசெய்து நேராக்கியபடி மிகவும் ‘கூலாக’அவர் பதில் கூறுகிறார்.ஒரு இடத்தில் மஹ்தி ஹசனைப் பார்த்து “பொறுமையை இழக்காதீர்கள்”என்று சொல்லுகிறார்.அதை அவர் மஹ்தி ஹசனுக்குச் சொன்னாரா? அல்லது தனக்குத் தானே சொன்னாரா?

அவர் கூறும் பதில்களில் பல இக்கட்டுரையின் நோக்கு நிலையில், அதாவது தமிழ் நோக்கு நிலையில் மோசமானவை.ஆனால் ரணில் முக்கியமான இடங்களில் மிகவும் கூலாகப் பதில் சொல்லுகிறார்.சிரித்துக் கொண்டே தன்னை காந்தியோடு ஒப்பிடுகிறார்.சிரித்துக்கொண்டே இலங்கை ஒரு வன்முறை இல்லாத நாடு என்று கூறுகிறார்.சிரித்துக்கொண்டே சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்று கூறுகிறார்.

அதே சமயம் அவர் சொன்ன பதில்கள் பலவற்றிலிருந்து உலக சமூகமும் குறிப்பாக ஐநா ஒரு தெளிவான செய்தியைப் பெறக்கூடியதாக இருந்தது.அது என்னவென்றால், சிங்களபௌத்த அரசுத் தலைவர்கள் யாராக இருந்தாலும் பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதுதான்.

2015ஆம் ஆண்டு பொறுப்புக் கூறலுக்கான ஐநாவின் தீர்மானத்திற்கு இணையனுசரணை வழங்கியது ரணில் விக்ரமசிங்கதான்.நிலைமாறு கால நீதிக்கான அந்த தீர்மானத்துக்கு ரணில்-மைத்திரி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதற்கு முன்னரும் பின்னரும் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானங்களுக்கு எந்த ஒரு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரனை வழங்கவில்லை. மட்டுமல்ல,அந்த தீர்மானங்களுக்கு எதிராகவே காணப்பட்டன. ஆனால் ஒரே ஒரு தீர்மானம்,அதுவும் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம்,அதற்கு இணை அனுசரணை வழங்கிய ஒரே ஒரு தலைவர்,ஒரு பகிரங்க நிகழ்வில் வைத்துப் பொறுப்புக்கூறத் தயாரில்லை என்பதனை வெளிப்படுத்துகிறார்.அப்படியென்றால் ஐநாவில் இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணைக்குப் பொருள் என்ன?

பான் கி மூன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மஹிந்த விசாரணைக் குழுக்களை உருவாக்கினார். ஆனால் அவை உண்மையைக் கண்டுபிடிக்கவில்லை. அல்லது அவை கண்டுபிடித்த அற்ப உண்மைகளையும் கூட மகிந்த ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ரணில் அதைவிட ஒருபடி மேலே சென்று ஒரு தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கினார்.அதுவும் இலங்கைத் தீவில் நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்கான அதாவது பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். ஆனால் அவரும் அந்தத் தீர்மானத்துக்கு விசுவாசமாக இருக்கவில்லை. ஐநாவைப் பேய்க் காட்டுவதற்காகத்தான் அவர் அவ்வாறு இணை அனுசரனை வழங்கினார் என்பதைத்தான் அந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.

ஆனால் அதற்காக அவர் வெட்கப்படவில்லை.என்பதுதான் இங்குள்ள பயங்கரமாகும்.

ஜேவிபியின் இரண்டாவது ஆயுதப் போராட்டத்தின்போது சிங்கள மக்கள் சித்திரவதை செய்யப்பட்ட, கொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் சரி,தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த இன அழிப்புக் குற்றச்சாட்டுகளுக்கும் சரி,ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் சரி,அவர் பொறுப்புக்கூறத் தயாராக இருக்கவில்லை.பொறுப்பற்ற தனமாகப் பதில் சொன்னார்.

இலங்கைத்தீவின் வரலாற்றில் ஒரு முன்னாள் அரசத் தலைவர் அதுபோல எங்கேயும் அவமானப்படுத்தப்பட்டதாக எனக்கு நினைவில்லை.’உன்னுடைய வயதை விட என்னுடைய அரசியல் வாழ்வின் காலம் அதிகமானது’ என்று ரணில் சிரித்துக் கொண்டு செல்லலாம்.ஆனால் அவ்வளவு அனுபவசாலியான அவர் அதுபோல வேறு எங்கேயும் அவமானப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதாவது சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பை அம்பலப்படுத்திய ஆகப் பிந்திய நிகழ்ச்சி அது.சிங்கள பௌத்த அரசு தலைவர்கள் தமிழ் மக்களுக்கும் பொறுப்பு கூற மாட்டார்கள்;கொல்லப்பட்ட சிங்கள மக்களுக்கும் பொறுப்பு கூற மாட்டார்கள்;முஸ்லிம்களுக்கும் பொறுப்புக்கூற மாட்டார்கள்;மட்டுமல்ல சிங்களக் கத்தோலிக்கர்களுக்கும் பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பது அங்கே தெளிவாகத் தெரிந்தது.
எல்லாக் குற்றங்களையும் செய்துவிட்டு அல்லது குற்றவாளிகளைக் காப்பாற்றிக் கொண்டு கூலாக அவர் சொன்ன பதில்கள் யாவும்,இனஅழிப்புச் செய்தவர்களையும் தமது அரசியல் வெற்றிகளுக்காக முஸ்லிம் மக்களை பலியிட்டவர்களையும் அவர் பாதுகாக்கிறார் இன்று நம்பப் போதுமானவைகளாக இருந்தன.அதாவது குற்றங்களைப் பாதுகாக்கும் குற்ற மயப்பட்ட ஒரு அரசுக் கட்டமைப்புக்கு அவர் தலைவராக இருந்திருக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தினாரா?

மகா சங்கத்துக்கு விசுவாசமாக அவர் கூறிய பதிலில் தன்னை ஒரு சிங்கள பௌத்தனாகப் பிரகடனப்படுத்துகிறார்.அங்கே அவருடைய லிபரல் முகமூடி பாரதூரமாகக் கிழிகிறது. ஆனால் அவர் கூலாகப் பதில் கூறுகிறார்.

இதில் தமிழ் மக்களுக்குப் புதிதாக எதுவும் இல்லை.ஏனென்றால் ரணிலைப் பற்றி ஏற்கனவே தமிழ்மக்கள் மத்தியில் மிகப்பலமான ஒரு படிமம் உண்டு.அன்ரன் பாலசிங்கம் அவரை நரி என்று அழைத்ததை தமிழர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டுவது அந்த அடிப்படையில்தான்.எனவே ரணில் யார் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும்.

ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால் ரணிலோடு இணைந்து நல்லாட்சிக் காலகட்டத்தில் அதாவது 2015 இல் இருந்து 18 வரையிலுமான காலப்பகுதியில், நிலைமாறு கால நீதிக்காக உழைத்த தமிழ்ப் பிரதிநிதிகள் இருக்கிறார்களே, அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

அவர்கள் ரணிலை மட்டும் பாதுகாக்கவில்லை,கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித்தையும் பாதுகாத்தார்கள்.சஜித்தும் ரணிலைப்போலதான்.கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்த அதே காலப்பகுதியில்தான் ஐநா கூட்டத் தொடரும் நடந்தது.அப்பொழுது சஜித் ஐநா தீர்மானங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தார்.ரணில் மட்டுமல்ல சஜித்தும் பொறுப்புக்கூறத் தயார் இல்லை. அதுவும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் தமிழ் வாக்குகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் பொறுப்புக்கூறல் தொடர்பில் பன்னாட்டு பொறிமுறைகளுக்கு எதிராகத் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.இது நல்லூர் கிட்டுப் பூங்காவில் நடந்த,பொது வேட்பாளருக்கான கடைசிப் பிரச்சார கூட்டத்தில்,மேடையில் வைத்துப் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால் தமிழ்மக்களின் வாக்குகளை சுமந்திரன் சஜித்துக்கு வாங்கி கொடுத்தார்.தேசத் திரட்சிக்காக,பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட அரிய நேத்திரனை சுமந்திரனுக்கு விசுவாசமான மத்திய குழு கட்சியை விட்டு நீக்கியிருக்கிறது. அதாவது சிங்களத் தலைவர்கள் இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயார் இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளை அவர்களுக்குச் சாய்த்துக் கொடுக்கும் தமிழ்த் தலைவர்களும் தமிழ்மக்களுக்குப் பொறுப்புக்கூறத் தயாரில்லை.

 

The post ஊருக்கும் வெட்கமில்லை! உலகுக்கும் வெட்கமில்லை! ரணிலுக்கும் வெட்கமில்லை! appeared first on Global Tamil News.

நன்றி


Discover more from SARINIGAR

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

error: Content is protected !!