‘சுற்றுலா பயணிகள் கொலை கவலையளிக்கிறது’ – பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் எதிர்வினை | Concerned at tourist deaths – Pakistan reacts to Pahalgam attack

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டது கவலை அளிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பஹல்காமில் உள்ள பைசரன் அழகிய புல்வெளியின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். தங்களின் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹம்காம் அருகே உள்ள பைசரான் புல்வெளியில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள். கடந்த பல வருடங்களாக ஜம்மு காஷ்மீரில் குடிமக்கள் மீது நடத்தப்பட்ட மிகவும் மோசமான தாக்குதலில் இதுவும் ஒன்றாகும்.

லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றே ஸ்ரீநகர் விரைந்தார். ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா, சிஆர்பிஎஃப் டிஜி, ஜம்மு காஷ்மீர் டிஜி, ராணுவ அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

உயிரிழந்த 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு ஸ்ரீநகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்களுக்கு அமித் ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, அங்கு கூடி இருந்த உயிரிழந்தவர்களின் உறவினர்களை அமித் ஷா சந்தித்தார்.

அப்போது, இந்தக் கொடிய தாக்குதலை நடத்தியவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்த பாதுகாப்புபடையினர் அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள் என்று உறுதி அளித்தார்.

துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் தாரிக் ஹமீத் உள்ளிட்டோரும் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!