சென்னை: மத்திய பட்ஜெட்டில், சென்னையில் நடைபெறும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.8,445.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (ஆர்.டி.ஐ) வாயிலாக தெரியவந்துள்ளது.
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில், 2025-26-ம் நிதியாண்டுக்கு சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.8,445.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.5,434.72 கோடியும், பாட்னா மெட்ரோ திட்டத்துக்கு ரூ.3,165.19 கோடியும், பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ. 2,217 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, மஹாராஸ்டிராவில் மும்பை உட்பட நான்கு இடங்களில் நடக்கும் மெட்ரோ திட்டத்துக்கு ரூ.4,836 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது. 10 மாில மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ.31,755.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.8,445 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, நாட்டில் நடக்கும், மொத்த மெட்ரோ ரயில் திட்டங்களில் 26.6 சதவீதம் நிதியாகும்.
இதேபோல, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடக்கும் மெட்ரோ ரயில்திட்டங்களுக்கு கணிசமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் ஆர்.டி.ஐ-ல் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் முக்கிய மெட்ரோ திட்டங்களாக கோவை, மதுரை மற்றும் விமான நிலையம்- கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் அளித்து, தேவையான நிதியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.