மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு (20) நடைபெறும் 38-வது லீக் போட்டியில் 5 முறை சம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணிக்கு இந்த சீசன் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணி 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி (கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வியை (சென்னை, குஜராத், லக்னோ, பெங்களூரு அணிகளிடம்) சந்தித்துள்ளது. முதல் 5 போட்டிகளில் 4-ல் தோல்வி அடைந்த அந்த அணி சரிவில் இருந்து மீண்டு கடைசி 2 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடியுள்ளது.
சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறிக் கொண்டிருக்கிறது. தொடக்க போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 போட்டிகளில் (பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம்) சரண் அடைந்தது. முந்தைய போட்டிகளில் 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்து ஒரு வழியாக வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறது.
இவ்விரு அணிகளும் ஏற்கனவே சென்னை சேப்பாக்கத்தில் சந்தித்த தொடக்க போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க மும்பை அணி தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஐ.பி.எல்.இல் இதுவரை 38 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை 20 போட்டிகளிலும், சென்னை 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இவ்விரு அணிகளும் வான்கடே மைதானத்தில் 12 முறை சந்தித்ததில் மும்பை 7-5 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.