தமிழ் தேசியம் எதிர் NPP? நிலாந்தன்

 

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் வேட்பாளர் என்னிடம் கேடடார்,ஒரு துண்டுப் பிரசுரத்தைத் தயாரிப்பதற்கு பின்வரும் கேள்விகளுக்கு கவர்ச்சியான விடைகள் வேண்டும் என்று. முதலாவது கேள்வி,தேசிய மக்கள் சக்திக்கு ஏன் வாக்களிக்க கூடாது? இரண்டாவது கேள்வி, மேற்படி வேட்பாளருடைய கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? மூன்றாவது கேள்வி, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?

நான் அவரிடம் சொன்னேன், முதலிரண்டு கேள்விகளும் சரி மூன்றாவது கேள்வி பொருத்தமானதா? என்று. ஏனெனில் என்பிபிக்கு எதிராக தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கு இடையே போட்டித் தவிர்ப்பிற்கு போவதன் மூலம்தான் வாக்குத் திரட்சியைப் பாதுகாக்கலாம். இல்லையென்றால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தது போல தமிழ் மக்கள் வாக்களிப்பார்களாக இருந்தால் என்பிபிக்குரிய வெற்றி வாய்ப்புகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும். தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரே நேரத்தில் என்பிபிக்கு எதிராகவும் ஏனைய மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராகவும்-ஆக மொத்தம் நான்கு தரப்புகளுக்கு எதிராகப்- போட்டியிட வேண்டி வரும்.

இது என்பிபிக்கு உற்சாகமூட்டக்கூடிய ஒரு விடயம்.தேர்தல் களத்தில் ஒப்பீட்டளவில் என்பிபி அதிகம் உற்சாகமாக வேலை செய்கிறது என்றே தோன்றுகிறது. கிராமங்கள் தோறும் நகரங்கள் தோறும் அவர்கள் தாங்கள் “எங்கும் இருக்கிறோம்” என்ற ஒரு தோற்றம் வரத்தக்க விதத்தில் பிரச்சாரத்தை காட்சி மயப்படுத்துகிறார்கள். தமிழ்க் கிராமங்களிலும் நகரங்களிலும் கண் படுமிடமெல்லாம் அவர்களுடைய சுவரொட்டிகளும் பதாகைகளும் உண்டு. அது மட்டுமல்ல, ஏனைய எல்லாக் கட்சிகளையும் விட என்பிபிதான் அதிக அளவில் பெருங்கூட்டங்களை ஒழுங்குபடுத்துகிறது. இக்கூட்டங்களில் அரச பிரதானிகள் கலந்து கொள்கிறார்கள்.

என்பிபிக்கு அடுத்தபடியாகத்தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழரசுக் கட்சியும் வேலை செய்கின்றன என்று தோன்றுகிறது.தமிழ்த் தேசிய கட்சிகள் இதுவரை குறிப்பிட்டுச் செல்லக்கூடிய பிரமாண்டமான கூட்டங்களை ஒழுங்குப்படுத்தியிருக்கவில்லை.வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டங்கள்தான் நடக்கின்றன.இது கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் ஒப்பிடப்பட்ட ஒரு விடயம்.அப்பொழுதும் என்பிபிதான் அதிகம் பெருங் கூட்டங்களை ஒழுங்குபடுத்தியது.அதுவும் அது பெற்ற வெற்றிகளுக்கு ஒரு காரணம்.தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களிடம் நிதி இல்லை என்று கூறுகின்றன.புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்து பெரிய அளவில் நிதி திரளவில்லை என்றும் தெரிகிறது. அவ்வாறு பெருங்கூட்டங்களை நடத்தாத ஒரு பின்னணிக்குள் தேசிய மக்கள் சக்தியானது அரங்கில் அதிகம் வேலை செய்யும் ஒரு கட்சி என்ற தோற்றம் எழுகிறது.

அண்மையில் நெடுங்கேணிப் பகுதிக்கு பிரதமர் ஹரிணி போனபோது, அங்கே அவரை வரவேற்று பதாகைகள் தொங்க விடப்பட்டன.அந்தப் பததைகளை ஒட்டியவர்களில் ஒருவர் தடுப்பிலிருந்து வந்த முன்னாள் இயக்கத்தவர் என்றும் மற்றவர் ஒதியமலைப் படுகொலையில் கொல்லப்பட்டவரின் மகன் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் செயற்பாட்டாளர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தத் தகவல் சரியா பிழையா என்பது தெரியவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தியை ஆதரிப்பவர்கள் யார் யார் என்று பார்த்தால் அவர்களில் குறிப்பிடத்தக்க அளவு தொகையினர் முன்பு தமிழ்த் தேசியக் கட்சிகளோடு நின்று உழைத்தவர்கள்தான்.

இங்கு யாழ் பல்கலைக்கழகத்தை ஒரு குறிகாட்டி எனலாம். ஒரு காலம் தமிழ்த் தேசிய ஆத்மாவை அடைகாத்த மையங்களில் அதுவும் ஒன்று.ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் மிக ஆபத்தான அரசியல் சூழலில் பல விரிவுரையாளர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவாக வேலை செய்தார்கள்.சிலர் கைது செய்யப்பட்டார்கள்.சிலர் தலைமறைவாக நேரிட்டது. அப்படிப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களில் எத்தனை பேர் இப்பொழுது தமிழ்த் தேசியக் கட்சிகளோடு பகிரங்கமாக நிற்கின்றார்கள்?

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் இதுதான் நிலைமை. அப்பொழுது கிட்டத்தட்ட 15 விரிவுரையாளர்கள் ஒரு அறிக்கை விட்டிருந்தார்கள்.அந்த அறிக்கையில் அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை நேரடியாகச் சொல்லத் தயங்கினார்கள்.ஆனால் இப்பொழுது அவர்கள் வெளிப்படையாகவே தேசிய மக்கள் சக்தியின் மேடைகளில் தோன்றுகிறார்கள்.அவர்களில் ஒருவர் யாழ்.மாநகர சபைக்குரிய பிரதான வேட்பாளர்.மற்றொருவர் மொழிபெயர்ப்பாளராக தமிழ் அரசியற் சூழலிலும் இலக்கியச் சூழலிலும் நன்கு தெரியவந்த ஒருவர்.எளிமையானவர். சைக்கிளில்தான் திரிவார். அனுரவின் நண்பர்.பல ஆண்டுகளுக்கு முன்பு யாழ். வீரசிங்க மண்டபத்தில்,விடுதலைப் புலிகளால் ஒழுங்கமைக்கப்பட்ட “மானிடத்தின் ஒன்று கூடல்” நிகழ்வில் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்.கிட்டு பூங்காவில் நடந்த அனுரவின் கூட்டத்தில் அவர்தான் மொழிபெயர்ப்பாளர்.

இத்தனைக்கும் யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டவர்கள்தான் அதிகம்.ஆனால் அவர்கள் அமைப்பாக்கப்படவில்லை. தமிழ் மக்களின் பண்பாட்டுத் தலைநகரம் ஒன்றில் அமைந்துள்ள உயர் கல்வி நிறுவனமானது தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு கல்விச் சமூகமாக ஏன் வெளிப்படையாக இயங்கத் தயங்குகின்றது?ஆசிரியர்களும் சரி மாணவர்களும் சரி ஒரு சமூகமாக செயல்படத் தயாரில்லை.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் அரசறிவியல் துறைத் தலைவர் ஒருவர் மட்டும்தான் பொது வேட்பாளருக்கான அணியில் வெளிப்படையாகக் காணப்பட்டார். ஆசிரியர்களும் ஒரு சமூகமாக வரத் தயங்கினார்கள்;மாணவர்களும் உதிரிகளாகவே வந்தார்கள்.அறிக்கைகள் விட ஆயிரம் அமைப்புகள் உண்டு.ஒரு பல்கலைக்கழகம் அறிக்கையோடு நின்றுவிட முடியாது.கடந்த நாடாளுமன்ற தேர்தலோடு “தமிழ்த் தேசியமா?அல்லது என்பிபியா?” என்ற மோதல் ஏற்பட்டிருக்கும் ஒரு பின்னணியில்,ஒரு பகுதி விரிவுரையாளர்கள் வெளிப்படையாக என்பிக்கு ஆதரவாக நிற்கும் ஒரு பின்னணியில்,பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் தங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு தமிழ்தேசியக் கட்சியோடு வெளிப்படையாக நின்று உழைப்பதற்கு ஏன் தயாரில்லை?

என்பிபிக்கு ஆதரவான விரிவுரையாளர்கள் வெளிப்படையாக வேலை செய்கின்றார்கள்.அரசாங்கத்தோடு வேலை செய்வது பாதுகாப்பானது.அது உயர் கல்வியையும் பாதிக்காது பதவி உயர்வுகளையும் பாதிக்காது. ஆனால் தமிழ்த் தேசியத்தின் பக்கம் நிற்பது ‘ரிஸ்க்’ ஆனது.அதனால்தான் தமிழ்த் தேசியக் கட்சிகளோடு வெளிப்படையாக நிற்பதற்கு பல்கலைக்கழகம் தயங்குகின்றது என்று ஒரு விளக்கம் தரப்படலாம்.

ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியும் அர்ஜுனாவும் பெற்ற வெற்றிகளின் பின்னரும், ஒரு பண்பாட்டுத் தலைநகரத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனம் அவ்வாறு கூறிக் கொண்டிருக்க முடியாது.அதிலும் குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக சிங்களபௌத்த மயமாக்கலை அதிகம் எதிர்கொள்ளும் ஒரு பல்கலைக்கழகம் அவ்வாறு ஓய்ந்திருக்க முடியாது.யாழ். பல்கலைக்கழகத்தின் சில துறைகளில் ஒப்பீட்டளவில் சிங்கள மாணவர்களின் தொகை அதிகரித்து வருகிறது.கடந்த 15 ஆண்டுகளில் அதிகம் சிங்கள பௌத்த மயப்பட்டு வரும் நிறுவனங்களில் யாழ். பல்கலைக்கழகமும் ஒன்று. அது கடந்த 15 ஆண்டு கால தமிழ்த் தேசிய அரசியலின் ஒரு குறி காட்டியாக நிற்கிறது.

தமிழ்த் தேசிய கட்சிகள் தங்களையும் கட்சிகளாக வளர்த்துக் கொள்ளவில்லை. தமிழ் மக்களையும் ஒரு தேசமாகத் திரட்டிக் கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கட்சிகள்,கடந்த 15 ஆண்டுகளாக கடமைப்புக்களுக்கூடாகச் சிந்திக்கத் தவறிவிட்டன.மாணவ அமைப்புக்கள்,ஆசிரியர்கள் மற்றும் அறிவுஜீவி அமைப்புக்கள்,மகளிர் அமைப்புகள்,தொழிற்சங்கங்கள்,தொழில்சார் அமைப்புக்கள் போன்ற அமைப்புகளை உள்வாங்கி தமிழ்த்தேசிய அரசியலை கட்டமைப்புகளுக்கு ஊடாக கட்டியெழுப்பத் தவறி விட்டன.அந்த வெற்றிடத்திற்குள் கட்டமைப்புகளை உருவாக்கும் பயிற்சியும் அனுபவமும் மிக்க ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட என்பிபி தீயாக இறங்கி வேலை செய்கின்றது.ஏனென்றால் அப்படிப்பட்ட கட்டமைப்புகளை இணைத்து உருவாக்கபட்டதுதான் என்பிபி.

கடந்த பொதுத் தேர்தலில் அவர்களுக்கு கிடைத்த வெற்றி எதிர்பாராத ஒன்று. ஆனால் இனி வரக்கூடிய தேர்தல்களில் அந்த வெற்றியை எப்படிப் பாதுகாப்பது?எப்படி அடுத்த கட்டத்துக்கு வளர்த்துச் செல்வது?என்றுதான் அவர்கள் திட்டமிடுகிறார்கள்.எனது நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டியதுபோல தேர்தல் காலத்தில் தலதா மாளிகையின் புனித தந்த தாதுவை மக்கள் தரிசிப்பதற்கு அனுமதித்ததன்மூலம் என்பிபி சிங்கள பௌத்த வாக்குகளைக் கவரப்பார்க்கிறது. அதனால் கண்டி மாநகரத்தின் தெருக்களில் எதிர்பாராத விதமாக குவிந்த யாத்திரிகர்கள் கண்டி மாநகரத்தை குப்பைத் தொட்டியாக்கி விட்டார்கள்.தந்த தாதுவைக் காட்டப்போய் குப்பை கொட்டியதில் முடிந்து விட்டதா?

என்பிபி யாழ்ப்பாணத்தில் பலாலி வீதியைத் திறக்கின்றது.சோதனைச் சாவடிகளை மூடுகின்றது,மாவிட்ட புரம் கந்தசாமி கோவிலுக்குப் போகின்றது. கண்டியில் தலதா மாளிகையைத் திறந்து விடுகிறது.எல்லாமே தேர்தல் உள்நோக்கத்தைக் கொண்டவை.கிட்டுப் பூங்காவில் அனுர வந்த பொழுது அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்புக் காணொளி அதிகமதிகம் பகிரப்படுகின்றது.அவரை நோக்கி ஆண்களும் பெண்களும் தங்களுடைய கைகளை குலுக்குவதற்காக நீட்டுகிறார்கள். சிலர் உணர்ச்சி மேலிட்டால் அல்லது திட்டமிட்டு “ஜெய வேவ” என்று கோஷம் எழுப்புகிறார்கள்.கடந்த பல தசாப்தங்களில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு சிங்கள பௌத்த அரசுத் தலைவருக்கு இப்படி ஒரு வரவேற்புக் கிடைத்ததில்லை.இப்படி ஓர் ஈர்ப்பு இருந்ததில்லை.

‘”அது திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட ஒரு கூட்டம். திட்டமிட்டு காட்சி மயப்படுத்தப்பட்ட ஒரு விடயம்”.என்று கூறிவிட்டுக் கடந்துபோக முடியாது. தமிழ்க் கட்சிகள் விட்ட வெற்றிடத்தில்தான் என்பிபி மேலெழுந்தது.அர்ஜுனா மேலெழுந்தார்.இப்பொழுதும் தமிழ் தேசியக் கட்சிகள் நான்காக நிற்கின்றன. இது தமிழ் மக்களைக் கவர உதவாது.அதேசமயம் அது என்பிபிக்கு உற்சாகமூட்டுவது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமான ஒரு விடயம்.நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரான ஒரு புதிய மாற்றம் அது. எனினும் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல, தமிழ்த் தேசியக் கட்சிகள் போட்டித் தவிர்ப்புக்கு போகக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரியவில்லை.பிரச்சாரக் கூட்டங்களிலும் ஒருவர் மற்றவரைத் தாக்கி வருகிறார்கள்.ஒவ்வொரு கட்சியும் ‘நான்;நான்’ என்று சிந்திக்கின்றது.’நாங்கள் தேசம்’என்று சிந்திப்பதாகத் தெரியவில்லை. நான்; நான் என்று ஒவ்வொரு வேட்பாளரும் சிந்திக்கும்போது அங்கே ” நாங்கள்”என்ற தேசியக் கூட்டுணர்வு ஏற்படாது.நான் நான் என்று சிந்தித்தால் போட்டித் தவிர்ப்பிற்குப் போக முடியாது.நாங்கள் என்று சிந்தித்தால்தான் போட்டித் தவிர்ப்புக்குப் போகலாம்.ஆனால் தேசிய மக்கள் சக்தியோ ‘நாங்கள் இலங்கையர்கள்’ என்று சொல்லிக்கொண்டு தமிழ்க் கிராமங்களைக் கவ்விப் பிடிக்க முயற்சிக்கின்றது.

 

நன்றி

Leave a Reply

error: Content is protected !!