திருச்சி – பஞ்சப்பூரில் ரூ.128.94 கோடியில் கனரக சரக்கு வாகன முனையம் திறப்பு! | CM inaugurates Rs 128.94 crore heavy goods vehicle terminal in Panchapur

திருச்சி: திருச்சி – பஞ்சப்பூரில் ரூ.128.94 கோடி மதிப்பீட்டில் பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

திருச்சியில் காந்தி மார்கெட், கீழரண் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நிற்கும் சரக்கு வாகனங்களால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதகமாக திருச்சி பஞ்சப்பூரில் 38 ஏக்கர் பரப்பளவில் 246 கனரக வாகனங்கள் நிறுத்தும் வகையில் ரூ.128.94 கோடி மதிப்பீட்டில் கனரக சரக்கு வாகன முனையம் கட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி நடைபெற்று பணிகள் தொடங்கியது.

பணிகள் நிறைவுற்று பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து, கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்து, போக்குவரத்து முனைய மாதிரியை பார்வையிட்டார். முன்னதாக முனைய வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் பிரம்மாண்ட முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். சிலை அருகே வைக்கப்பட்ட அண்ணா படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், எம்பி சிவா, அரசு செயலர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் சிவராசு, ஆட்சியர் மா.பிரதீப்குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் ஆகியோருடன் அண்ணா சிலை முன்பு குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

என்னென்ன வசதிகள்: கனரக வாகனங்களை இயக்குபவர்களுக்கு 80 அலுவல் பணிக்கான கடைகள், 107 கண்காணிப்பு கேமிராக்கள், 2 எல்இடி அறிவிப்புப் பலகைகள், வாகனங்களுக்கான மின்னணு கட்டண வசதி, 148 இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்துமிடம், 56 ஒப்பனை அறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி ஒப்பனை அறைகள் மற்றும் பசுமை அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

கனரக வாகன ஓட்டுநர்களுக்கான தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 208 படுக்கைகள் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கூடுதலாக 29 ஒப்பனை அறைகள் கொண்ட சுகாதார வளாகம் ஒன்று தனியாக கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் 87 தனியார் ஆம்னி பேருந்துகள் வந்து செல்லும் வகையில் பேருந்துகள் நிறுத்துமிடமும் அமைகிறது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!