வடக்கு மாகாணத்தில் 150 உறுப்புரிமையை தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்டமை வரலாற்று ரீதியிலான வெற்றியாகும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பாரம்பரியமான அரசியல் கட்சிகளை காட்டிலும் ஒப்பீட்டளவில் வெற்றிப்பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் மாத்திரம் ஆளும் தரப்பு 150 உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளது.
மன்னார், வவுனியா , யாழ்ப்பாணம் ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி சிறந்த முறையில் வெற்றிப்பெற்றுள்ளது. ஒரு சில பகுதிகளில் பெரும்பான்மை பலத்தை ஆதரவை பெற்றுக் கொண்டுள்ளோம். யாழ். மாவட்டத்தில் 81 உறுப்புரிமை கிடைக்கப் பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு பிரதேச சபை ஆசனம் கூட கிடைக்கப் பெறவில்லை. ஆகவே வடக்கு மாகாணத்தில் 150 உறுப்புரிமையை பெற்றுக்கொண்டமை வரலாற்று ரீதியிலான வெற்றியாகும்.
வடக்கு மாகாணத்தில் பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சிகள் வீழ்ச்சியடைந்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலும் தேசியத்தை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்ட கட்சிகளே உள்ளன. இவ்வாறான நிலையிலும் தேசிய மக்கள் சக்தி அங்கும் வெற்றிப்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.